'கோச்சடையான்' படத்துக்காக வாங்கிய கடன் தொடர்பான விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு காவல்துறையினர் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்த 'கோச்சடையான்' திரைப்படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை தயாரிப்பதற்காக 'ஆட் பீரோ' நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹார் என்பவரிடம் படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் என்பவர் ரூ.14.9 கோடி கடன் பெற்றுள்ளார். இதற்கு முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையொப்பம் போட்டார்.
இந்நிலையில் அபிர்சந்த் நஹார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முரளி மீதும், லதா ரஜினிகாந்த் மீதும் நிதி மோசடி புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், லதா ரஜினிகாந்த், 'தி பப்ளிஷர்ஸ் அன்ட் பிராட்காஸ்டர்ஸ் வெல்ஃபர் அசோசியேஷன் இந்தியா ' என்ற செய்தி நிறுவனத்தின் பெயரில் அறிக்கை வெளியிட்டு 'ஆட் பீரோ' நிறுவனத்துடனான பிரச்சினை தொடர்பாக செய்தி வெளியிட 76 ஊடகங்களுக்கு தடை வாங்கினார்.
ஆனால், தி பப்ளிஷர்ஸ் அண்ட் பிராட்காஸ்டர்ஸ் வெல்ஃபர் அசோசியேஷன் இந்தியா என்ற அமைப்பின் உண்மைத் தன்மை குறித்து பெங்களூரு நகர காவல்துறை ஆணையர் பெங்களூரு பிரஸ் கிளப்பிடம் கோர பிரஸ் கிளப்போ இந்த அமைப்பு பெங்களூருவில் இருப்பதாக தெரியவில்லை என்றும் இந்த அமைப்புக்கும் பெங்களூரு பிரஸ்கிளப்புக்கும் இடையே தொடர்பில்லை என்றும் கூறிவிட்டது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆட் பீரோ நிறுவன தலைவர் பெங்களூரு நீதிமன்றம் ஒன்றில் லதா ரஜினிகாந்தை எதிர்த்து தவறான ஆவணங்கள், மற்றும் போலி நிறுவனம் உருவாக்குதல் ஆகிய புகார்களைக் கூறி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்நிலையில் லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.