‘கற்றது தமிழ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ‘பசங்க’, கோலிசோடா’ என்று படிப்படியாக வளர்ந்த மாஸ்டர் ஸ்ரீராம் இன்று அரும்பு மீசை ஹீரோவாக நிற்கிறார். ‘கமர்கட்’, ‘தரை டிக்கெட்’ என்று இரண்டு படங்களில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
நாயகனான உற்சாகத்தில் இருக்கும் ஸ்ரீராமை சந்தித்துப் பேசினோம். கேள்விகளுக்கு தேவையே இல்லாமல் படபடவென்று பேசத் தொடங்கினார் ஸ்ரீராம்:
“அஜீத் சாருக்கும் எனக்கும் ஒரு மிகப் பெரிய ஒற்றுமை இருக்கிறது. அவர் பிறந்த மே 1ம் தேதிதான் நானும் பிறந்தேன். எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ பிறந்த அதே நாளில் நானும் பிறந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. எங்கள் குடும்பம் சின்னக் குடும்பம். அப்பா, அம்மா, நான், தம்பி என்று நாங்கள் நான்கு பேர்தான் குடும்பத்தில் இருக்கிறோம். என் அப்பா ஒரு உதவி இயக்குநர், உதவி ஒளிப்பதிவாளர். ஐ.வி.சசி, மனோ மேனன் ஆகியோரிடம் வேலை பார்த்தவர். ஸ்கூலுக்கு லீவ் விடும்போதெல்லாம் அப்பாவிடம் ஷூட்டிங்கிற்கு அழைத்துப் போகும்படி கேட்போம். ஆனால் அவர் அழைத்துச் செல்லமாட்டார். “ஒழுங்கா படிக்கிற வேலையப் பாருங்க” என்று சொல்வார்.
‘கற்றது தமிழ்’ படத்தில் நடிக்க சின்னப்பசங்க தேவை என்று என் அப்பாவிடம் இன்னொரு உதவி இயக்குநர் கூறியுள்ளார். அப்போது என் அம்மா, அப்பாவிடம் என் தம்பி போட்டோவை அனுப்பச் சொல்லியிருக்கிறார். என் தம்பி என்னைவிட கொழுக் மொழுக்கென்று அழகாய் இருந்ததால் அம்மா இப்படி சொல்லியிருக்கிறார். இதன்படி என் தம்பி போட்டோவை அனுப்பிய அப்பா, எதற்கும் இருக்கட்டும் என்று என் போட்டோவையும் அனுப்பியிருக்கிறார். இயக்குநர் ராம் சாருக்கு என்னைப் பிடிச்சுப்போச்சு. இதைத் தொடர்ந்து ‘கற்றது தமிழ்’ படத்தில் ஜூனியர் ஜீவாவா நடிச்சேன்.
கேமரா முன்னாடி எப்படி நடிக்கணும்னு ராம் சார்தான் எனக்கு சொல்லிக்கொடுத்தார். ‘கற்றது தமிழ்’ வந்து ஒன்றரை வருஷத்துக்குப் பிறகு ‘பசங்க’ படத்தில் நடித்தேன். அந்தப்பட ஷூட்டிங் ஸ்கூல் டூர் மாதிரிதான் இருந்துச்சு. பாண்டிராஜ் சார் இயல்பா எங்ககிட்ட வேலை வாங்கினதால நடிப்பை பத்தி நல்லா புரிஞ்சுக்க முடிஞ்சுது. இரண்டாவது படமான ‘பசங்க’ படத்துல எனக்கு தேசிய விருது கிடைச்சுதுன்னா அதுக்கு ராம் சாரும் பாண்டிராஜ் சாரும்தான் காரணம்.
தொடர்ந்து ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்துல நடிச்சேன். இது வேறுவிதமான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தோட இயக்குநர் திரு சார், ரொம்பவும் கூலாக இருப்பார்.சுலபமாக அலட்டிக் கொள்ளாமல் வேலை வாங்குவார். அந்தப் படத்தில் என்னை ஸ்டைலாகக் காட்டியிருப்பார். இதில் நடித்தபோது கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணா சாருடன் பழகினேன். கேமரா பற்றி அவர் எனக்கு நிறைய சொல்லித்தந்தார்.
டைரக்டர் ஹரி என் அம்மாவோட பால்யகால தோழர். அவர் இயக்கத்துல ‘வேங்கை’ படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. எதற்குமே பதட்டப்படாத அவரது ஸ்டைல் எனக்கு ரொம்பவே பிடிக்கும். இதைத் தொடர்ந்து, ‘வந்தான் வென்றான்’, ‘வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்’ ‘ஜில்லா’ன்னு பல படங்களில் நடித்தேன்.இதில் ‘ஜில்லா’ படத்தில் நடித்தபோதுதான் பிரம்மாண்டம்னா என்னன்னு தெரிஞ்சது. மாஸ் ஹீரோ படம்ன்னா எவ்வளவு செலவு செய்றாங்கன்னு ஆச்சர்யப்பட்டேன்.
அந்தப் படத்துக்கு பிறகு ‘கோலிசோடா’ படத்தில் நடிச்சேன். அந்தப் படத்துல எனக்கு பேர் கிடைச்சதுன்னா அதுக்கு முழுக்க முழுக்க விஜய் மில்டன் சார்தான் காரணம். கோலிசோடா யூனிட்ல மொத்தமே 12 பேர்தான். இந்த 12 பேரை வெச்சுகிட்டுதான் 80 நாட்கள் எடுத்தார். சும்மா வாங்கடா என்று கூப்பிட்டு டெஸ்ட் ஷூட் என்று எடுப்பார். நல்லா இருந்தால் அந்த ஷாட்டையே ஓகே செய்துடுவார். இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமா ‘கோலிசோடா’ உருவாச்சு. அந்தப் படமும் 100 நாள் ஓடிடுச்சு. இப்படி இயக்குநர்கள்தான் என் வளர்ச்சிக்கு முழு காரணம்” என்று உற்சாகமாக கூறுகிறார் ஸ்ரீராம்.
தற்போது எஸ்.ஏ.சி. ராம்கி இயக்கத்தில் ‘கமர்கட்’ படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் ஸ்ரீராம், செல்வம் என்ற அறிமுக இயக்குநர் இயக்கத்தில் ‘இந்தப்படத்தை பார்க்காதீங்க’ என்ற படத்திலும் தனது அப்பா இயக்கத்தில் ‘தரை டிக்கெட்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இயக்குநர்களை தன் வெற்றிக்கு காரணமாக கூறும் இவர் கடைசி வரை இயக்குநர்களின் ஹீரோவாக இருந்து பல வெற்றிப்படங்களை கொடுப்பார் என்று எதிர்பார்ப்போம்.