தமிழ் சினிமா

விஜய் படத்தில் பாடவிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்?

ஐஏஎன்எஸ்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தில், ஏ.ஆர்.ரஹ்மானை ஒரு பாடல் பாடவைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

சிம்புதேவன் இயக்கிவரும் 'புலி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஜய். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்து விட்டன. சமந்தா, ஏமி ஜாக்சன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் விஜய்யுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார், இவரது இசையில் உருவாகும் 50வது படம் இது.

ஜூன் 26ம் தேதி சென்னை திரும்பும் விஜய், ஜூலை 1ம் தேதி முதல் அட்லீ படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். இப்படத்தின் பாடல் பதிவு தீவிரமாக நடைபெற்று வந்தது.

"ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஜி.வி.பிரகாஷ் மற்றும் படக்குழுவினர் இது குறித்து பேசி வருகிறார்கள். எல்லாம் சரியாக அமைந்தால், இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடுவார். இது தன் 50வது படம் என்பதால் ரஹ்மான் பாட, ஜி.வி. பிரகாஷ் ஆர்வத்துடன் இருக்கிறார்." என்று ஜி.வி.பிரகாஷுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் குறித்து ஜி.வி.பிரகாஷ் "அட்லீ - விஜய் இணையும் புதிய படத்தில் எல்லா பாடல்களுமே புதிய ட்ரெண்டை உருவாக்கும். இளையதளபதியின் அதிரடி நடனத்தை காண விரும்புபவர்களுக்காக ஒரு உலக லோக்கல் பாடல் காத்திருக்கிறது” என்று தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT