ரஜினிகாந்தின் கவனம் ஈர்க்கும் நோக்குடன், அமுதன் இயக்கத்தில் வெளியான 'தமிழ் படம்' பாணியில், 'பவர் ஸ்டார்' சீனிவாசனை வைத்து கலாய்ப்புப் படம் தயாரிக்கத் திட்டமிட்டிருப்பதாக 'லிங்கா' விநியோகஸ்தர்கள் புதிய வதந்தி ஒன்றை கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'தமிழ் படம்'. தமிழ் திரையுலகில் பிரபலமான படங்களை நையாண்டி செய்து வெளிவந்தது 'தமிழ் படம்' என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படத்தின் பாணியில், 'லிங்கா' விவகாரத்தை படமாக உருவாக்க, ஒரு படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அந்தப் படத்தில் நாயகனாக நடிக்க பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்றும் தகவல்கள் பகிரப்பட்டன.
தொடர்ச்சியாக வெற்றி படங்களையே கொடுத்துவரும் நாயகன், ஒரு படுதோல்வி படத்தைக் கொடுக்கிறார். அப்படத்தினால் வரும் நஷ்டங்களை எப்படி விநியோகஸ்தர்கள், அந்த நாயகனிடம் இருந்து திரும்பி வாங்கினார்கள் என்பதை மையக்கரு என்று கூறப்பட்டது.
எனக்கு போட்டி எப்போதுமே சூப்பர் ஸ்டார் தான் என்று கூறிவரும் பவர் ஸ்டார் இப்படத்தில் நாயகன் வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்றும், இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என்றும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறிக் கொண்ட லிங்கா விநியோகஸ்தர்களில் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
அதேவேளையில், லிங்கா சிக்கலில் ரஜினிக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்து வரும் தொடர்புடைய விநியோகஸ்தர்கள், அவரது இமேஜை சீர்குலைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே, இந்தக் கலாய்ப்புப் படம் குறித்த தகவல்களை வெளியிட்டு வருவதாக, ரஜினிக்கு நெருக்கமான தரப்பு குற்றம்சாட்டியது.
இது தொடர்பாக பவர் ஸ்டார் சீனிவாசனைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, "அப்படியா.. என்னை யாரும் இப்படம் தொடர்பாக தொடர்பு கொள்ளவில்லை. அந்தச் செய்தியில் உண்மையில்லை" என்று தெரிவித்தார்.