'ஜிகர்தண்டா' படத்தின் இந்தி உரிமையை விற்றது தொடர்பாக தயாரிப்பாளர் கதிரேசன் மீது இயக்குநர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
சித்தார்த், சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'ஜிகர்தண்டா', கதிரேசன் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.
'ஜிகர்தண்டா' மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. சிம்ஹா நடிப்பிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து இருந்தனர். இப்படத்துக்காக தேசிய விருது வென்றிருக்கிறார் சிம்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பட வெளியீட்டு சமயத்தில் தயாரிப்பாளர் கதிரேசன் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இருவருக்குமே மோதல் ஏற்பட்டது. படத்திற்கு கண்டிப்பாக 'U' சான்றிதழ் தான் வேண்டும் என்று தயாரிப்பாளர் கூற, அதற்கு சென்சார் அதிகாரிகள் சில காட்சிகளை நீக்க வேண்டும் என தெரிவித்தார்கள். ஆனால், கார்த்திக் சுப்புராஜ் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். 'U/A' சான்றிதழுடன் தான் 'ஜிகர்தண்டா' வெளியானது.
அதுமட்டுமன்றி 'ஜிகர்தண்டா' படத்தின் 50ம் நாளன்று "50 போட்டதுக்கு ஊர் முழுவதும் ப்ளக்ஸ் ஏற்றியிருந்திருக்கலாம். ஒரு பேப்பர் விளம்பரம், போஸ்டராவது ஒட்டிருக்கலாம். 'ஜிகர்தண்டா' 50-வது நாளை கடந்திருப்பதற்கு சந்தோஷப்படுகிறேன்" என்று ட்விட்டர் தளத்தில் தனது வேதனை பதிவு செய்தார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
தற்போது மீண்டும் தயாரிப்பாளர் கதிரேசன், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது. படத்தின் இந்தி உரிமையை பெரும் விலைக்கு கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர். ஆனால், படத்தின் ஒப்பந்தப்படி மற்ற மொழி உரிமைகளில் எனக்கு 40% பங்கு இருக்கிறது. ஆனால், தயாரிப்பாளர் என்னிடம் எதுவுமே கூறாமல், இந்தி உரிமையை கொடுத்திருக்கிறார் என்று இயக்குநர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.