தமிழ் சினிமா

விரைவில் வெள்ளித்திரையில் இணையும் சூர்யா - ஜோதிகா

ஸ்கிரீனன்

விரைவில் ஜோதிகாவோடு இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக சூர்யா தெரிவித்திருக்கிறார்.

'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'காக்க காக்க', 'பேரழகன்', 'சில்லுனு ஒரு காதல்' ஆகிய படங்களில் சூர்யா - ஜோதிகா இணைந்து நடித்தார்கள். படங்களில் நடிக்கும் போதே இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதிக்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு 8 ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார் ஜோதிகா. தற்போது சூர்யா தயாரித்த '36 வயதினிலே' மூலம் மீண்டும் நடிப்பு உலகிற்கு திரும்பி இருக்கிறார் ஜோதிகா.

இந்நிலையில் சூர்யாவிடம், மீண்டும் ஜோதிகாவோடு இணைந்து நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, "நான் தெளிவாக அறிவிப்பு வெளியிட விரும்புகிறேன். இரு இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறேன். எங்கள் இருவருக்குமே அந்தக் கதைகள் பிடித்திருக்கின்றன.

ஆனால் 10 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளோம். முதலில் திரைக்கதையை முடிப்பவரோடு அடுத்த வருடத்தில் படம் தொடங்கப்படலாம்" என்று பதிலளித்திருக்கிறார் சூர்யா.

SCROLL FOR NEXT