தமிழ் சினிமா

நயன்தாராவின் நெருக்கமான நண்பராக மாறிய இயக்குநர்

ஸ்கிரீனன்

'நானும் ரவுடிதான்' படத்தில் நயன்தாராவை இயக்கி வரும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது அவருக்கு மிகவும் நெருக்கமான நண்பராக உருவாகி இருக்கிறார்.

சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அப்படத்தைத் தொடர்ந்து 'நானும் ரவுடிதான்' படத்தின் இயக்கி வருகிறார். அப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை தனுஷ் தயாரித்து வருகிறார்.

சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் ஏற்பட்ட காதல் பிரிவைத் தொடர்ந்து யாரையும் நெருங்கிய நட்பு வட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை நயன்தாரா. ஆனால், விக்னேஷ் சிவன் தற்போது நயன்தாராவின் மிகவும் நெருக்கமான நண்பராக வலம் வர ஆரம்பித்திருக்கிறார்.

இயக்குநர் மட்டுமன்றி 'என்னை அறிந்தால்' படத்தில் இடம்பெற்ற "அதாரு.. அதாரு" உள்ளிட்ட சில பாடல்களையும் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார். அதுமட்டுமன்றி 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷ் ஃபேஸ்புக்கில் பொறியாளர் தேவை என்று பதிவிட்டவுடன் வருபவர் தான் விக்னேஷ் சிவன். அப்படத்தில் சிறு வேடத்திலும் திரையில் தோன்றினார்.

இவர்களது நட்பு குறித்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் நெருக்கமான நண்பர்களிடம் விசாரித்த போது, "நயன்தாராவின் நெருங்கிய நண்பராக விக்னேஷ் சிவன் மாறியிருப்பது உண்மை தான். விக்னேஷ் சிவனுக்கு அண்மையில் கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார் நயன்தாரா" என்றார்கள்.

'நானும் ரவுடிதான்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.​

SCROLL FOR NEXT