வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை முடித்துக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் நாளை (வியாழக்கிழமை) சென்னை திரும்புகிறார்.
இயக்குநர் மணிரத்னம் புதுடெல்லியில் உள்ள இந்திரப்பிரஸ்தம் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் எதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது தெரியாமல் இருந்த நிலையில், வழக்கமான மருத்துவப் பரிசோதனையை முடித்துக் கொண்டு அவர் நாளை சென்னை திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மணிரத்னம் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓகே கண்மணி திரைப்படத்தின் செயலாக்க இயக்குநர் மாலா மாயன் கூறும்போது, "மணிரத்னமும் அவரது மனைவியும் டெல்லியில் விடுமுறைக் காலத்தை கொண்டாடிக் கொண்டிருந்தனர். மணிரத்னத்தின் வழக்கமான மருத்துவப் பரிசோதனை நீண்ட நாட்களாக தள்ளிப்போடப்பட்டு வந்ததால் அவர் டெல்லி மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனையை மேற்கொண்டார். சென்னையில் ரசிகர்கள் பார்வையில் இருந்து தப்பிக்கவே, அவர் டெல்லியில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார்" எனத் தெரிவித்தார்.
மணிரத்னம் கடந்த 2004-ம் ஆண்டு யுவா படத்தை எடுத்துக் கொண்டிருந்தபோதும், 2009-ல் ராவணா படம் எடுத்துக்கொண்டிருந்தபோதும் மாரடைப்புக்குள்ளானார் என்பது கவனிக்கத்தக்கது.