'வாலு' தயாரிப்பாளர் சக்ரவர்த்தி கடன் பிரச்சினையில் சிக்கி இருப்பதால், மே 9ம் தேதி திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என்ற சந்தேகம் நிலவி வருகிறது.
சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் 'வாலு'. தமன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்திருக்கிறார். விஜய் சந்தர் இயக்கி இருக்கிறார்.
நீண்ட வருடங்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. அனைத்து பிரச்சினைகளும் முடிந்து மே 9ம் தேதி இப்படம் வெளியாக இருப்பதாக விளம்பரப்படுத்தி வந்தார்கள். தற்போது மே 9 வெளியீடு என்ற விளம்பரமும் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
என்ன பிரச்சினை என்பது குறித்து விசாரித்த போது, "தயாரிப்பாளர் சக்ரவர்த்தி வாங்கிய கடன் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மே 9ம் தேதி இப்படம் வெளியாக வாய்ப்பு குறைவு தான்" என்றார்கள்.
ட்விட்டர் தளத்தில் 'வாலு' வெளியாகுமா, வெளியாகாதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, " தயாரிப்பாளருக்கு நெருக்கமானவர்களோடு பேசியதில் ‘வாலு’ 15ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது " என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பதிலளித்து இருக்கிறார்.
மே 9ம் தேதியும் 'வாலு' வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த சிம்பு ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருக்கிறார்கள்.