கௌதம் மேனன் - சிலம்பரசன் கூட்டணியில் உருவாகி வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் மலையாள நடிகை மஞ்சிமா மோகன் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக நாயகியாக நடிக்கவிருந்த பல்லவி சுபாஷ் படப்பிடிப்பு தேதிகள் ஒத்துவராத காரணத்தினால் படத்திலிருந்து வெளியேறினார்.
படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, "சமீபத்தில் வெளியான 'ஒரு வடக்கன் செல்ஃபி' படத்தில் மஞ்சிமா மோகனின் நடிப்பைப் பார்த்து இயக்குநர் கௌதம் மேனன் அவரை ஒப்பந்தம் செய்துள்ளார்" என்றார்.
மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய மஞ்சிமா, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள மாநில விருதினைப் பெற்றவர். அவரது முதல் தமிழ் படம் 'அச்சம் என்பது மடமையடா'.
தெலுங்கிலும் உருவாகும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் நாயகனாக நாக சைதன்யா நடிக்கவுள்ளார். தெலுங்கு பதிப்பிலும் மஞ்சிமாவே நாயகியாகலாம் என்று தெரிகிறது.