தமிழ் சினிமா

கமல்ஹாசனின் புதிய படத்தின் தலைப்பு தூங்காவனம்?

ஸ்கிரீனன்

தனது இணை இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் படத்துக்கு 'தூங்காவனம்' என தலைப்பிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'உத்தம வில்லன்' படத்தைத் தொடர்ந்து தனது இணை இயக்குநர் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டார் கமல். அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க த்ரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

இப்படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் கதையாகும். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தின் கதைப்படி 3 நாயகிகள் இருக்கிறார்கள். த்ரிஷா முக்கிய நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி விட்டார். இன்னும் இரண்டு நாயகிகள் வேடத்தில் மனிஷா கொய்ராலா மற்றும் அனைக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். 'காவியத்தலைவன்' படத்தில் அரசி வேடத்தில் நடித்தவர் தான் அனைக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படத்துக்காக ராஜ்கமல் நிறுவனம் 'தூங்காவனம்' என்ற தலைப்பை பதிவு செய்திருக்கிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

முதலில் மொரீசியஸ் நாட்டில் படமாக்க திட்டமிடப்பட்ட இத்திரைப்படம், தற்போது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இப்படத்துக்கும் இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜிப்ரான். கமலுடன் இணைந்து அவர் பணியாற்றும் 4வது படம் இது.

SCROLL FOR NEXT