ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்து வரும் 'உத்தம வில்லன்' படத்தின் சென்னை படப்பிடிப்பு இன்று தொடங்கி இருக்கிறது.
'விஸ்வரூபம் 2' தாமதமான காரணத்தில் கமல் உடனடியாக தொடங்கிய படம் தான் 'உத்தம வில்லன்'. கதை, திரைக்கதையை கமல் எழுத, இயக்கி வருகிறார் ரமேஷ் அரவிந்த். ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் சிறு பகுதியும், துருக்கியில் ஒரு பாடலையும் படமாக்கி இருக்கிறார்கள்.
தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவினை முடித்து விட்டு திரும்பி இருக்கும் கமல்ஹாசன், இன்று முதல் சென்னையில் நடைபெறும் 'உத்தம வில்லன்' படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இப்படப்பிடிப்பு தொடர்ச்சியாக 47 நாட்கள் நடைபெற இருக்கிறது.
இப்படத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜா குமார், 'பூ' பார்வதி, இயக்குநர் பாலசந்தர், இயக்குநர் விஸ்வநாத், ஜெயராம் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.