எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் ‘புறம்போக்கு’. தூக்கு தண்டனைக் கைதி, தூக்கு போடும் தொழிலாளி, காவல் துறை அதிகாரி ஆகிய கதா பாத்திரங்களில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடித்துள்ளனர். இது பற்றி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கூறியதாவது:
ஒரு கைதிக்கு தூக்கு தண்டனை அறிவித்ததும் கயிற்றை எடுத்து உடனடியாக தூக்கிலிட முடியாது. கயிறு இத்தனை அடி நீளம் இருக்க வேண்டும், குறிப்பிட்ட தடிமன் இருக்க வேண்டும் என்று பல விதிமுறைகள் இருக்கின்றன. தவிர, அதை பாலில் ஊறவைப்பது, வெண்ணெய் தடவி குற்றவாளிக்கு வலி இல்லாமல் தண்டனை நிறைவேற்றுவது என்பது உள்ளிட்ட பல நுணுக்கங்கள் உள்ளன. இதை முழுவதுமாக கற்றுத் தேர்ந்த தொழிலாளியாக சிறைக்குள் வலம் வருகிற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். தூக்கு தண்டனைக் கைதி ஆர்யா. அந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கான வேலைகளை செய்யும் காவல்துறை அதிகாரி ஷாம்.
படத்தை இயக்கியிருப்பதோடு, முதல் பிரதி அடிப்படையில் தயாரித்தும் இருக்கிறேன். பொதுவாக, ‘யு’ சான்றிதழ் பெறும் படத்தின் தயாரிப்பாளர், முறையாக அரசின் வரிச் சலுகைக்கான கடிதம் எழுதி உரிய சலுகைகள் பெற முடிகிறது. ‘புறம்போக்கு’ படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளதால், அரசின் வரிச்சலுகை பெற வாய்ப்பு இல்லை.
யு/ஏ சான்றிதழ் பெறும் படங்களுக்கும் அரசு வரிச்சலுகை அளிக்கவேண்டும் என்று ஒரு தயாரிப்பாளன் என்ற முறையில் கோரிக்கை விடுக்கிறேன். மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதா இதற்கான வாய்ப்பை ஏற்ப டுத்தித் தரவேண்டும். இது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நேரடியாக பயன் அளிக்கக்கூடியதாக இருக்கும்.
இவ்வாறு ஜனநாதன் கூறினார்.