என்னுடைய பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நபர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இளையராஜா தெரிவித்துள்ளார்.
தான் இசையமைத்த பாடல்களை தன்னுடைய உரிமை இல்லாமல் சிடி மற்றும் டி.வி.டிக்களில் விற்பனை செய்வதை தடை செய்யக் கோரியும், அதை விற்பனை செய்யும் ஆடியோ நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்து தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றார் இசையமைப்பாளர் இளையராஜா.
மேலும், தன்னுடைய பாடல்களுக்கு கிடைக்கும் காப்புரிமையை பராமரிக்கும் மற்றும் விநியோகிக்கும் உரிமையை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்கினார் இளையராஜா.
இந்நிலையில், சில ஆடியோ நிறுவனங்கள் தன்னுடைய பாடல்களைத் தொடர்ந்து உபயோகித்து வருவதற்கு எதிராக மிண்டும் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார் இளையராஜா.
இது குறித்து இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, "கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் சில ஆடியோ நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவது தங்கள் வியாபாரத்தை தொடர்ந்து கொண்டிருப்பதாக ரசிகர்கள் மூலம் தெரிந்து கொண்டோம்.
அதன் அடிப்படையில் DGP, Commissioner of Police மற்றும் Superintendent of Police ஆகியோருக்கு நீதிமன்றத்தின் உத்தரவையும், உத்தரவை மதிக்காத இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மற்றும் எல்லா கடைகளிலும் எளிதாக கிடைக்கின்ற Pirated Audio மற்றும் Video CDகளின் விற்பனையை தடுக்கக் கோரியும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற அவதிப்பு வழக்கும் தொடர உள்ளோம். Radio Mirchi நிறுவனம் தற்போது ஒளிபரப்பும் "நீங்க நான் ராஜா சார்" நிகழ்ச்சியை நிறுத்தச் சொல்லி கடிதம் அனுப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் தனது பெயரை தன்னுடைய எழுத்துபூர்வ அனுமதி கடிதம் இல்லாமல் யாரும் பயன்படுத்த கூடாது என்பதை இதன்மூலம் தெரியபடுத்துகிறோம்.
என்னுடைய பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நபர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். அவர்களின் உரிய இழப்பீடும் நீதிமன்றம் மூலமாக பெறப்படும்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் இளையராஜா