விநியோகஸ்தர்கள் புலம்பியதன் எதிரொலியாக இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த புறம்போக்க்கு என்கிற பொதுவுடமை படத்தின் வெற்றிச் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது.
ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை'. ஜனநாதன் இயக்கி, தயாரித்திருக்கிறார். யு.டிவி நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் இப்படத்தை தயாரித்திருக்கிறது. மே 15ம் தேதி இப்படம் வெளியானது.
மே 22ம் தேதி காலை சென்னையில் 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை' படத்தின் வெற்றி பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பது, "தமிழ்த் திரையுலகில் ஒரு படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் சக்ஸஸ் பிரஸ்மீட் நடத்துவது சம்பிரதாய சடங்காக உள்ளது. இதற்கு யு.டிவி நிறுவனமும் விதிவிலக்கல்ல என தெரிகிறது.
'புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை' திரைப்படத்தின் சக்ஸஸ் பிரஸ்மீட் மே 22 அன்று சென்னையில் நடக்க உள்ளதை கேட்டு அதிர்ச்சியடைந்தோம்.
படத்தை விலைக்கு வாங்கி விநியோகம் செய்த விநியோகஸ்தர்கள் அசல் தேறுமா என்கின்ற அச்சத்தில் அல்லாடிக் கொண்டிருக்கின்றோம். படத்தயாரிப்பு நிறுவனமோ 'புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை' படம் வெற்றி பெற்றதாக பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளது நகைப்பிற்குரிய செயலாக கருதுகிறோம்.
படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு வெற்றியா? இல்லை கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டு நாயகர்களாக நடித்த ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் ஆகியோருக்கு வெற்றியா?
படத்தை இயக்கிய இயக்குநர் ஜனநாதன் அவர்களுக்கு வெற்றியா? உண்மையை நிலையை மறைத்து ஏன் இந்த நாடகத்தை யு.டிவி நிறுவனம் நடத்துக்கிறது." என்று தெரிவித்திருக்கிறார்கள்.
அதுமட்டுமன்றி கோவை, திருச்சி, தஞ்சாவூர்,சேலம், செங்கல்பட்டு ஆகிய விநியோக ஏரியாவில் எந்தவிலைக் கொடுத்து படத்தை வாங்கி இருக்கிறார்கள், இன்னும் எவ்வளவு வசூலாகும், எவ்வளவு நஷ்டமாக வாய்ப்பு உள்ளிட்டவற்றை விநியோகஸ்தர்களின் தொலைபேசி எண்களோடு வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக, புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்தின் வெற்றிச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.