தூக்கு தண்டனை என்பது கொடுமை யான விஷயம் என திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் தெரி வித்தார்.
அண்மையில் வெளியாகியுள்ள ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ படக்குழுவினர் நேற்று மதுரை வந்தனர்.
அப்போது இயக்குநர், நடிகர்கள் விஜய்சேதுபதி, ஷாம், தயாரிப்பாளர் சித்தார்த்ராய் கபூர் ஆகியோர் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
இயக்குநர் ஜனநாதன் கூறியது: கடந்து ஓராண்டு கூட்டு முயற்சியின் விளைவாக, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ படம் வெளி வந்துள்ளது.
இந்தப் படத்தின் கதையை பொருத்தவரை சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்போல, பாலு என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யா, 5 குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி. அவருக்கு தண் டனை பெற்றுத் தருவதில் தீவிரம் காட்டும் போலீஸ் அதிகாரியாக மெக்காலே என்ற பாத்திரத்தில் நடிகர் ஷாம், அவரை தண்டனையில் இருந்து தப்பிக்க வைக்க போராடும் குயிலி கதாபாத்திரத்தில் நடிகை கார்த்திகாவும், கைதிக்கு தூக்குபோட மறுக்கும் எமலிங்கம் என்ற கதா பாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.
மரண தண்டனை வேண்டாம் எனப் பல நாடுகள் கூறி வருகின்றன. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதனைக் கருவாகக் கொண்டு தான் இந்தப் படத்தை எடுத்தேன்.
என்னைப் பொருத்தவரையில் தூக்குத் தண்டனை கொடுமையான விஷயம். அது சரியா தவறா என்பதை இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்களிடம் விட்டு விடுகிறேன். ஒரு போராளி இறந்தால் மற்றொரு போராளி உருவாவான் என்பதை முன்வைத்தே நாயகனின் இறப்பை பதிவு செய்தேன். தொடர்ந்து சமூகப் பொறுப்புள்ள படங்களையே இயக்கு வேன்’’ என்றார்.
நடிகர் விஜய்சேதுபதி கூறியது: ‘‘இந்தப் படத்தில் நான், ஆர்யா, ஷாம் 3 பேருக்குமே இயக்குநர் சம வாய்ப்புகளை வழங்கினார். ஆர்யா, ஷாம் நல்ல ஒத்துழைப்பு கொடுத்த னர். அனைவரும் கதாபாத்திரங்களை புரிந்து நடித்ததால், இது வெற்றிப் படமாக அமைந்துள்ளது. எனது திரையுலக வாழ்வில் இது முக்கிய மான படம்’’ என்றார்.
நடிகர் ஷாம் கூறியது: ‘‘எஸ்.பி. ஜனநாதன் ஏற்கெனவே இயக்கிய இயற்கை என்ற படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார். அது எனக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
இந்தப் படத்தில் என்னை வித்தியாசமான காவல்துறை அதிகாரியாக காட்டி இருந்தார். என்னைப் பொருத்தவரை தவறு செய்பவர் யாராக இருந்தாலும் தண்டனை தர வேண்டும். அதில் தூக்கு தண்டனையும் விதிவிலக்கு அல்ல என்பதே எனது எண்ணம்’’ என்றார்.