தமிழ் சினிமா

காக்கா முட்டை சிறுவர்களின் படிப்பு செலவை ஏற்ற தனுஷ்

ஸ்கிரீனன்

'காக்கா முட்டை' படத்தில் நடித்த சிறுவர்களின் மொத்த படிப்பு செலவையும் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் ஏற்றுள்ளார்கள்.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரது கூட்டுத் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 'காக்கா முட்டை'. சிறுவர்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடிக்க இயக்குநர் மணிகண்டன் இயக்கி இருக்கிறார். சிம்பு கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.

அச்சந்திப்பில் தனுஷ் பேசியது, "'காக்கா முட்டை' வெளியீட்டிற்கு முன்பே எங்களுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் படம். இந்தப் படத்தை தயாரித்ததில் எங்களுக்கு மிகவும் பெருமை. இப்படத்தின் கதையை முதல் 10 பக்கம் மட்டுமே படித்தேன், அதற்குப் பிறகு படிக்கவில்லை.

ஏனென்றால் அக்கதையில் உள்ள சின்ன காக்கா முட்டை நான், பெரிய காக்கா முட்டை எனது அண்ணன் செல்வராகவன். எங்களுடைய வாழ்க்கையை நான் பேப்பரில் பார்த்த மாதிரி இருந்தது. இப்படத்தில் வரும் பாதி விஷயங்களை நாங்கள் பண்ணியிருக்கிறோம். கதையைப் படிக்கும்போது மிகவும் நெகிழ்ந்துவிட்டேன். கண்டிப்பாக இந்தப் படத்தில் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

இப்படம் ஏற்கனவே லாபம் சம்பாதித்துக் கொடுத்துவிட்டது. இப்படம் முதல் நாள் வசூல் வந்தாலே எனக்கு லாபம் தான். தற்போது இப்படத்தில் நடித்திருக்கும் விக்னேஷ் மற்றும் ரமேஷ் இருவரின் மொத்த படிப்பு செலவையும் நான் மற்றும் வெற்றிமாறன் ஏற்று இருக்கிறோம். அவர்கள் எவ்வளவு படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அது வரை எங்களது பங்களிப்பு இருக்கும்" என்று பேசினார். பேசிமுடித்தவுடன் சிறுவர்களைப் பார்த்து "டேய்.. ஒழுங்கா படிக்கணும் டா" என்று சிரித்துக் கொண்டே தெரிவித்தார் தனுஷ்.

'காக்கா முட்டை' திரைப்படம் மே 22ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT