'இது நம்ம ஆளு', 'ஹைக்கூ' படத்தைத் தொடர்ந்து விஷால் நடிக்கவிருக்கும் படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க 'இது நம்ம ஆளு' படத்தை இயக்கி வருகிறார் பாண்டிராஜ். இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது.
'இது நம்ம ஆளு' தாமதத்தால் சூர்யாவின் '2டி நிறுவனம்' தயாரிக்கும் 'ஹைக்கூ' படத்தை இயக்கி வந்தார் பாண்டிராஜ். இப்படத்திலும் இரண்டு பாடல்கள் மட்டுமே பாக்கி இருக்கிறது. விரைவில் இதற்கான படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து விஷால் தயாரிக்கவிருக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விஷால் நடித்து வரும் 'பாயும் புலி' படப்பிடிப்பு முடிந்தவுடன் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். விஷால் இப்படத்தை தயாரிப்பது மட்டுமன்றி நாயகனாகவும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
இப்படம் குறித்து விஷாலிடம் கேட்ட போது, "இதுவரை நான் நடித்த வேடங்களை விட பாண்டிராஜ் சார் படத்தில் நடிக்கவிருக்கும் வேடம் வித்தியாசமானது. ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் வகையைச் சார்ந்து இப்படம் இருக்கும்" என்று தெரிவித்தார்.