தனுஷ் - வெற்றிமாறன் இணைப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் முதல் துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
தனுஷ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் படம் ஒன்றைத் தொடங்கினார்கள். அப்படத்தை தனுஷ் தயாரிக்க முன்வந்தார்.
தனுஷ், வெற்றிமாறன் இருவருமே 'காக்கா முட்டை', 'விசாரணை' ஆகிய படங்களைக் கூட்டாக தயாரித்திருக்கிறார்கள். இதில் வெற்றிமாறன் இயக்கி இருக்கும் 'விசாரணை' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
'விசாரணை' பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் தனுஷ் நடித்து வரும் படத்தின் பணிகளைத் துவக்கினார் இயக்குநர் வெற்றிமாறன். இப்படத்துக்கு 'சூதாடி' என்று தற்போதைக்கு தலைப்பிட்டு இருப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் வெற்றிமாறன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் 'காக்கா முட்டை' திரைப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வரவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து 'விசாரணை' வெளிவர இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் இணையும் படத்தின் படப்பிடிப்பை செப்டம்பரில் துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இத்தகவலை, 'காக்கா முட்டை' பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் வெற்றிமாறன் உறுதிப்படுத்தினார்.