தமிழ் சினிமா

சினிமாவாகிறது ‘டியூப்ளக்ஸ்’ திகில் குறும்படம்

மகராசன் மோகன்

‘பீட்சா’, ‘யாமிருக்க பயமே’, ‘டார்லிங்’, ‘காஞ் சனா 2’ பாணியில் இன்றைய தலைமுறை எதிர்கொள்ளும் காதலையும், திருமணத்தையும் மையமாக வைத்து திகில் பின்னணியில் ‘டியூப்ளக்ஸ்’ என்ற குறும்படத்தை படைத்திருக்கிறார் கோபிநாத்.

பரபரப்பாக இயங்கும் நகரத்தில் அழகான ஒரு டியூப்ளக்ஸ் வீட்டில் வசிக்கின்றனர் நாயகன் அஜய், நாயகி ஸ்வேதா. வீட்டில் திடீரென ஒருநாள் ஸ்வேதா வின் தங்க வளையல் காணாமல் போகிறது. சனி, ஞாயிறு அலுவலகம் விடுமுறை என்பதால் வெள்ளிக் கிழமை மாலை அஜய்யின் அம்மா வீட்டுக்கு புறப் படுகிறாள் ஸ்வேதா.

அவள் வீட்டில் இல்லாததை அறிந்த அஜய்யின் அலுவலக நண்பர்கள் அவனது வீட்டில் வாரக் கடைசி பார்ட்டி கொண்டாடுகின்றனர். அதில் ஒருவன் பாத்ரூமில் ஒரு அமானுஷ்ய சக்தியைப் பார்த்ததுபோல திடுக்கிடுகிறான். அவனைத் தேடிச் செல்லும் மற்றொரு நண்பனுக்கும் திகில் காத்திருக் கிறது.

இதற்கிடையில், தனது வளையலை வீட்டு வேலைக் காரிதான் எடுத்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் ஸ்வேதாவுக்கு வருகிறது. அதை கையும் களவுமாக கண்டுபிடிப்பதற்காக வீட்டில் கேமரா பொருத்திவிட்டு வந்துவிடுகிறாள். நண்பர்களுடன் சேர்ந்து அஜய் மது அருந்துவது முதல் அவர்களது ஆட்டம், பாட்டம் அரட்டை வரை எல்லாமே கேமராவில் பதிவாகிறது.

அந்த காட்சிகளை பதிவு செய்துகொண்டு வந்து, தன் தோழியின் வீட்டில் அமர்ந்து அவளுடன் சேர்ந்து பார்க்கிறாள். நண்பர்களின் பார்ட்டி, அரட்டைகளைக் கடந்து வேறு சில விஷயங்களும் கேமராவில் பதிவாகின் றன. அது என்ன என்பதை திகில் கலந்து 27 நிமிடங்கள் கொண்ட குறும்படமாக்கி யுள்ளார் இயக்குநர் கோபிநாத்.

அஜய், ஸ்வேதா கதாபாத்திரங்களில் மகேஷ், மிசா கோஷல் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள னர். கணவனிடம் அன்பை, கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியில் மிசா கோஷல் நடிப்பு கச்சிதம். வாரக் கடைசி பார்ட்டியில் நண்பர்கள் கூடிக் களிக்கும் காட்சியை இன்னும் சற்று மெருகேற்றியிருக்கலாம் சில காட்சிகள் மட்டுமே டெய்சி கதாபாத்திரத்தில் வரும் சஞ்சனா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஏதோ ஒரு மர்மம் வீட்டில் இருப்பதை கேமரா அழகாக படம் பிடித்திருக்கிறது. எடிட்டர், இசை அமைப் பாளரும் உணர்ந்து பணியாற்றியுள்ளனர்.

குறும்படத்தை இயக்கிய அனுபவம் பற்றி கோபிநாத் கூறியதாவது:

முதலில் ‘வருங்காலம்’ என்ற பெயரில் ஒரு குறும்படம் இயக்கினேன். எந்த நாட்டுக்குச் சென்று வாழ்ந்தாலும் நமது தாய்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளவராக இருக்க வேண்டும் என்ற கருத்து கொண்டது அந்த குறும்படம். பெரிதாக பேசப்படவில்லை என்பதால், ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இந்த குறும்படத்தை இயக்கினேன்.

திருமணத்துக்கு முன்பு இருந்த காதலை மறக்க முடியாமல், திருமணத்துக்குப் பிறகும் அவர்களது உறவு தொடர்வதைப் பற்றிய கதை இது. அது கூடாது. அது தொடர்ந்தால் நேரும் பின்விளைவுகள் என்ன என்பதை திகில் கலந்து பொழுதுபோக்காக சொல்ல முயற்சி செய்ததன் விளைவுதான் இந்த குறும்படம்.

எந்த இடத்திலும் த்ரில்லிங், சஸ்பென்ஸ் குறைந்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். நண்பர்கள் அன்பரசு கணேசன், கார்த் திக்ராஜ், ஜேசுராஜ் சவரிமுத்து எல்லோரு ம் சேர்ந்து தயாரித்தோம். எங்கள் கூடவே இணைந்து இந்த குறும்படத்துக்கு இசை அமைத்த மனோஜ்.கேஎஸ், எடிட்டிங் செய்த அர்னால்டு சாம்சன், ஒளிப்பதிவு செய்த அப்பு.ஆர்.நவீன் ஆகியோரின் உழைப்பும் உள்ளது.

தயாரிப்பாளர் வி.ஏ.துரை, இயக்குநர் ராமகிருஷ்ணன் இருவரும் பார்த்துவிட்டு, ‘சினிமாவில் உள்ள அத்தனை அம்சங்களும் இருக்கிறதே’ என்று பாராட்டினார்கள். ‘டியூப்ளக்ஸ்’ குறும்படத்தை சினிமாவாக்கும் முயற்சி இப்போது நடந்துவருகிறது.

கோபிநாத்

SCROLL FOR NEXT