மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ஓ காதல் கண்மணி'. விமர்சகர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
எப்போதுமே சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும் இயக்குநர் ராம் கோபால் வர்மா, 'ஓ காதல் கண்மணி' படத்தையும் விட்டுவைக்கவில்லை.
'ஒ காதல் கண்மணி' படத்தைப் பார்த்துவிட்டு "இப்போதான் மணிரத்னத்தின் படத்தைப் பார்த்தேன். விருது வழங்குபவர்களுக்கு சிறிதளவேனும் நியாய உணர்வு இருந்தால், மம்முட்டிக்கு வழங்கிய விருதுகளை எல்லாம் திரும்பப் பெற்றுக் கொண்டு, அவற்றை அவரது மகன் துல்கர் சல்மானுக்கு வழங்கிவிடுவார்கள்.
அவரது மகனோடு ஒப்பிடும்போது மம்முட்டி வெறும் ஜூனியர் ஆர்டிஸ்டே. தனது மகனிடமிருந்து மம்முட்டி நடிப்பு கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, யதார்த்தமான நடிப்பை. கேரள மாநிலத்தை மற்ற இடங்களில் பெருமையடையச் செய்ய பல வருடங்களாக மம்முட்டியால் முடியவில்லை, அதை இன்னும் சில வருடங்களில் மம்முட்டியின் மகன் செய்துவிடுவார்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் ராம் கோபால் வர்மா.
ராம் கோபால் வர்மாவின் கருத்துக்களுக்கு மம்முட்டியின் மகன் துல்ஹர் சல்மான், "இன்னும் 10 பிறவி எடுத்தாலும், நான் எவ்வளவும் சாதித்தாலும், என் தந்தையின் நடிப்புத் திறமையில் மில்லியனில் ஒரு சதவீதம்கூட என்னால் ஈடுகொடுக்க முடியாது" என்று ராம் கோபால் வர்மாவை குறிப்பிடாமல் பதிலளித்து இருக்கிறார்.