உதவி இயக்குநராக வாய்ப்பு தேடும் போது இயக்குநர் பாக்யராஜ் மற்றும் மணிரத்னம் ஆகியோரிடம் பணியாற்ற ஆசைப்பட்டிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி
அருண் விஜய், கார்த்திகா, கல்யாண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'வா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ரத்தின சிவா இயக்கியிருக்கும் இப்படத்துக்கு தமன் இசையமைத்து இருக்கிறார். இப்பத்திரிகையாளர் சந்திப்பில் கெளதம் மேனன், லிங்குசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
அச்சந்திப்பில் பாக்யராஜ் மற்றும் மணிரத்னம் இருவரிடம் தான் உதவி இயக்குநராக சேர கஷ்டப்பட்டதை பகிர்ந்து கொண்டார் லிங்குசாமி.
"நான் உதவி இயக்குநராக சேர ஆசைப்பட்டது பாக்யராஜ் சாரிடமும், மணி சாரிடமும் தான். ஊரில் இருந்து கிளம்பி வந்தது பாக்யராஜ் சாரிடம் சேர வேண்டும் என்று தான். அப்போது அவருடைய அலுவலக வாசலில் மிகப்பெரிய கூட்டம் இருக்கும். கூட்டத்தை சமாளிக்க வேண்டுமே என்று நினைத்து ஒரு சில நேரங்களில் பின்வாசல் வழியாக கூட பாக்யராஜ் சார் சென்று விடுவார். பாக்யா அலுவலகத்தில் போய் நிற்பேன்.
பாக்யராஜ் சாரைப் பார்த்தாலே எனக்கு கால்கள் எல்லாம் நடுங்கும். பயங்கர பதட்டமாக இருக்கும். காதலிக்கும் பெண் நம் முன்னாடி வரும் போது ஒரு பதட்டம் இருக்கும் இல்லையா, அதே போல தான். உண்மையில் பாக்யராஜ் சார் என் முன்னாடி வந்தால் நான் யாருடைய பின்னாடியாவது ஒளிந்துக் கொள்வேன். அவரைப் பார்க்க வேண்டும் என்று தான் நிற்பேன். ஆனால், பார்த்தவுடன் பதட்டமாகி விடும். அவருடைய படங்கள் மீது இருக்கும் காதல் தான் அது.
பாக்யராஜ் சாரிடம் நான் சேர்ந்திருந்தால் அவருக்கு ஒரு உண்மையான சிஷ்யனாக இருந்திருப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதே போல தான் மணி சாரிடம் உதவி இயக்குநராக சேர வேண்டும் என்று ட்ரை பண்ணிக்கிட்டே இருப்பேன்.
'இந்திரா' படம் சுஹாசினி மேடம் இயக்குவதாக இருந்தது. மணி சாரைப் பார்க்கவே முடியாது என்பதால், அவருடைய அலுவலகத்தில் போய் நிற்பேன். மேலே போய் பார்க்கக் கூட விட மாட்டார்கள். அவரது காருக்கு பக்கத்திலேயே நிற்பேன். எப்படினாலும் இந்தக் காரில் தானே ஏற வர வேண்டும் என்று அங்கேயே நிற்பேன்.
ஒரு நாள் சுஹாசினி மேடம் வந்தாங்க. "யார் நீ?" என்று கேட்டார்கள். "உதவி இயக்குநராக சேர வேண்டும் என்று விரும்புகிறேன். யாரும் உள்ளே விட மாட்டேன் என்கிறார்கள்.. எப்படியும் இங்கே தானே வர வேண்டும் என்பதால் இங்கு நிற்கிறேன்" என்றேன். "உதவி இயக்குநர்கள் எல்லாம் சேர்த்து முடிந்துவிட்டது" என்றார்.
"கதையெல்லாம் நல்லா பேசுவேன். ஏதாவது உபயோகப்படும்" என்றேன். இவ்வளோ பேசுகிறானே என்று நினைத்து "10 நாட்கள் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு செய்யப் போகிறேன். 10 நாட்கள் கழித்து வந்து என்னைப் பாருங்கள்" என்றார்.
சுஹாசினி மேடத்திடம் நான் சேர விரும்பியது ஏனென்றால், ஒரு பையன் என்னிடம் வேலை செய்கிறான். நல்ல பையன் என்று சமையலறையிலோ, சாப்பிடும்போதோ மணி சாரிடம் சொல்லுவார்கள். அது மூலமாக மணி சாரிடம் போய்விடலாம் என்று நினைத்தேன்.
10 நாட்கள் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அந்த நேரத்தில் தான் ஷங்கர் சாரிடம் வெளியே வந்து பரபரப்பாக வெங்கடேஷ் சார் தொடங்கிய படம் 'மகாபிரபு'. அவரிடம் போய் உதவி இயக்குநராக சேர்ந்துவிட்டேன். " என்று தனது உதவி இயக்குநர் ஆசை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் லிங்குசாமி.