நடுத்தர வயது மற்றும் வயோதிகப் பெண்களை மையப்படுத்தி கதாபாத்திரங்கள் உருவாக்கப்படுவதில்லை என்று நடிகை ரேவதி கூறியுள்ளார்.
"எனக்கு வரும் வாய்ப்புகள் என்னை சலிப்படையச் செய்கின்றன. என் வயதுக்கேற்ற பாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அதற்காக, நாயகனின் தாய், வக்கீல் அல்லது டாக்டர் என மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி நடிக்க நான் விரும்பவில்லை.
பாத்திரப்படைப்பு சுத்தமாக இருப்பதில்லை. வெகு சிலரே 35 அல்லது 45 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களை மனதில் வைத்து அவர்களுக்கான பாத்திரங்களை எழுதுகின்றனர்.
ஒரு நடிகையாக எனக்கு இது சலிப்பைத் தருகிறது. ஒரே மாதிரியான பாத்திரங்களில் எந்த சவாலும் இல்லை. நான் அதிக எண்ணிக்கையில் படங்கள் நடிக்க விரும்பவில்லை. ஆனால் தரமான பாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்.
எனது வயதுக்கேற்றார் போல இந்த மொழியிலும் அவ்வளவான வாய்ப்புகள் வருவதில்லை. அதனால்தான் மிக மெதுவாக, இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் என நடித்து வருகிறேன்”.
தான் நினைக்கும் வகையிலான பாத்திரத்தை எழுதி இயக்குவது பற்றி கேட்டபோது, "ஒரு இயக்குநராக நான் இவ்வாறான விஷயங்களை முன்னரே முடிவு செய்வதில்லை. ஒரு சம்பவம் அல்லது கதை என்னை பாதித்தால் அதைப் இயக்குகிறேன். தற்போது என்னிடம் இரண்டு கதைகள் உள்ளன. அதில் ஒன்று 45 வயதைத் தாண்டிய ஒரு பெண்ணைப் பற்றி" என்றார்.
ரேவதி நடிப்பில் தற்போது 'மார்கரீடா வித் அ ஸ்ட்ரா' என்ற இந்தித் திரைப்படம் வெளியாகியுள்ளது.