தமிழ் சினிமா

நண்பேன்டா: முதல் பார்வை

உதிரன்

உதயநிதியின் மூன்றாவது படம், உதயநிதி - சந்தானம் மூன்றாவது முறையாக இணைந்த கூட்டணி, உதயநிதி - நயன் இரண்டாவது முறையாக இணைந்து நடித்தது... இந்த காரணங்கள் போதாதா நண்பேன்டா படத்தைப் பார்க்க?

ராஜேஷ் உதவியாளர் ஜெகதீஷ் நண்பேன்டா படத்தின் மூலம் இயக்குநராக புரமோஷன் வாங்கியிருக்கிறார். மக்கள் மத்தியில் இந்தப் படம் லைக்ஸ் அள்ளுமா?

கதை என்ன?

உதயநிதி படத்தில் கண்டிப்பாக கேட்கவே கூடாத விஷயம் கதைதான் என்பதை சினிமா பார்க்கும் நல்லுலகத்துக்கு சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

தஞ்சாவூரில் இருக்கும் உதயநிதி திருச்சியில் இருக்கும் நண்பன் சந்தானத்தை மாதத்தின் முதல்நாள் பார்க்க சென்றுவிடுவார். அப்படி ஒரு நாள் திருச்சி வரும் உதயநிதி எதேச்சையாக நயன்தாராவை பார்க்கிறார். அப்போது, தன் ஜாதகத்தையொட்டிய காதல் பற்றி அம்மா சொன்னது நினைவுக்கு வர, அந்த சூத்திரம் பலிக்கிறதா என பல்லாங்குழி ஆடத் தொடங்குகிறார் உதயநிதி.

சிறையில் இருந்து தப்பித்து செல்ல நினைக்கிறார் உதயநிதி. முதல் காட்சியிலேயே உதயநிதி கைதியா? அதுவும் தப்பிக்க நினைக்கிறாரா? என்ற எந்த அதிர்ச்சியும் இல்லாமல் ரசிகர்கள் படம் பார்க்கத் துவங்கினர். உதயநிதியின் என்ட்ரிக்கு சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு இணையான சைலன்ஸை மெயின்டெய்ன் பண்ணி ரசிகர்கள் மௌன யாகம் நடத்தினர்.

அதைக் கலைக்கும் விதத்தில், 'பியூஸ் போன பல்பு மாதிரி ஏதாவது புஸ்வானம் மாதிரி ஒரு காரணம் சொல்லுவாங்கப்பா... உதயநிதி படத்துல ஆக்‌ஷன், த்ரில்லர்லாம் எதிர்பார்க்காதே' என பின்சீட்டில் இருந்தவர் தன் நண்பனுக்கு சொல்லிக்கொண்டிருந்தார்.

உதயநிதி ஃபிளாஷ்பேக் விரிகிறது. போலீஸ் கெட்டப்பில் வேகமாக பைக்கில் வருகிறார். அடுத்த காட்சியிலேயே அவர் டிராமாவுக்காக போலீஸ் கெட்டப்பில் வருகிறார் என்பது தெரிந்துவிடுகிறது.

இது எதிர்பார்த்ததுதான் என்று ஒரு ரசிகர் சத்தம் போட்டுச் சொன்னார்.

'காக்கிச்சட்டை' படம் பார்த்து அடுத்த காட்சி என்ன என்று யூகித்து யூகித்தே அது சரியாய் திரையில் வர, தங்களுக்கு தாங்களே சபாஷ் சொல்லிக்கொண்டு கை தட்டிக்கொண்ட ரசிகர்களாச்சே. சும்மாவா?

நயன்தாரா அறிமுகக் காட்சிக்கு தியேட்டரில் விசில் பறந்தது. காமோசோமோ என பேசிக்கொண்டிருந்தவர்கள் நயனைப் பார்த்ததும் சைலன்ட் மோடுக்கு வந்தனர். ரசிகர்களிடத்தில் கொஞ்சம் உற்சாகத்தைப் பார்க்க முடிந்தது.

சந்தானம் என்ட்ரிக்கு கொஞ்சம் சப்தம் எழுப்பியபடி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அதன்பின் நகரும் கதை... கொஞ்சம் நிதானமாய், மெதுவாய் எந்த சுவாரஸ்யங்களும், திருப்பங்களும் இல்லாமல் கடந்தது.

நயன் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்வதற்காக உதயநிதியை சந்திக்கிறார். தன் பின்னணி குறித்து அவர் சொல்லும்போது இடைவேளை.

'இப்போதான் கதைக்கே வர்றாங்க போல' என்று பேசியபடி பாப்கார்ன் வாங்கும் கவுண்டரில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

'வழக்கம்போல உட்டலக்காடியா ஒரு மொக்கை காரணம் சொல்வாங்க மச்சான்'னு பப்ஸ் வாங்கும் கூட்டத்தில் இருவர் சீரியஸ் டிஸ்கஷன் செய்து கொண்டிருந்தனர்.

என்ன நடந்தது? என்று இடைவேளையில் இருப்பு கொள்ளாமல் இருக்க, அந்த காரணத்தை நயன் சொல்லும்போது உதயநிதிக்கு மட்டுமல்ல, நமக்கும் சிரிப்பு வந்து தொலைக்கிறது.

நயன் கோபித்துக்கொண்டு செல்ல, எப்படி சமாதானம் ஆனார் என்பதை வெள்ளித்திரையில் காண்க.

சந்தானம் காதல், கருணாகரனின் சின்ன வயது அவமானங்கள், நயன்தாராவுக்கு நடந்தது என்ன? என்று ஃபிளாஷ்பேக் காட்சிகள் அவ்வளவும் ட்விஸ்ட் என்ற பெயரில் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

உதயநிதி சந்தானம் - ஷெரினை சேர்த்துவைக்க பட்டிமன்ற ராஜாவுக்கு உண்மையை உணர வைக்கும் சீன் ஸ்ப்பா... முடியல...

சந்தானம் வழக்கம்போல ரைமிங் டைமிங்கில் பின்னி எடுப்பார் என்று பார்த்தால் கொஞ்சம் மிஸ் ஆகிறார். காமெடியில் காப்பாற்றிவிட்டார் என்றோ, கை நழுவ விட்டார் என்றோ சொல்ல முடியாத நடுசென்டர் பாயின்டில் பாய்போட்டு உட்கார்ந்திருக்கிறார். பன்ச் பேசி பாயாதது கொஞ்சம் குறைதான். ஒன் லைனர் வசனங்கள் கூட அதிகம் இல்லாதது ரசிகர்களை விசனப்பட வைக்கிறது.

ப்ளீஸ் நோட் பண்ணுங்க சந்தானம் சார்... இது கூட இல்லைன்னா எப்படி?

நயன் படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ். முன்பை விட இளமையாக கொஞ்சம் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார். கதாபாத்திர வடிவமைப்பு கொஞ்சம் கவனத்தோடு செதுக்கப்படவில்லை என்றாலும், கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். நயன்தாராவின் டிரெண்டி உடைகள் கவனம் ஈர்க்கின்றன. கோபத்தில் வெடிப்பது, பிறகு மென்சோகத்தில் இருப்பது, கலங்குவது என நயனின் ரியாக்‌ஷன்கள் வழக்கம்போல உள்ளன.

சோகம் ததும்பும் சீரியஸ் டைமில் கூட நீ சன்னோ நீ மூணோ என்று டூயட் பாடும் கொடுமையை நயனுக்காக மட்டுமே மன்னிச்சூ....

கோயில் அருகே உதயநிதி - நயனை ரொமான்ஸ் செய்தபடி சண்டை போடுவது தமிழ் சினிமாவில் பார்த்துப் பார்த்து சலித்த பழைய ஐடியா. ஆனாலும் நயனின் எக்ஸ்பிரஷன்களுக்காக மட்டுமே அந்த சண்டைக் காட்சியை சகித்துக்கொள்ள முடிகிறது.

ஒரு கட்டத்துக்கு மேல் உதயநிதி சந்தானம் அல்லது நயன் தாரா இல்லாமல் படத்தில் வருவதே இல்லை.

டெரராகக் காட்டப்படும் நான் கடவுள் ராஜேந்திரன் அதற்குப் பிறகு காமெடியாகிப் போகிறார். வில்லியாக சூஸன் வரும் காட்சிகள் எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தவில்லை.

சாம்பிளுக்கு சில ஒன் லைன் வசனங்கள்:

காலையில சூப்பர் ஃபிகரை பார்த்தேண்டா?

யாராவது சுமாரான ஃபிகரை பார்த்தேன்னு சொல்றீங்களா?

அவசரத்துக்கு செஞ்ச அண்டா மாதிரி இருக்கான்?

அலட்சியம் செய்யும்போது கூட அசரிரீ மாதிரி சிரிக்குற

பீடிக்கட்டு மாதிரி இருக்கான் இவன் தான் பிடி மாஸ்டரா?

உதயநிதி ஜாலியாக வருகிறார். போகிறார். கொஞ்சம் டான்ஸ் ஆடுகிறார். டயலாக் டெலிவிரியில் கூட கொஞ்சம் முன்னேறி இருக்கிறார். ஆனால், அடுத்த கட்டத்துக்குத் தாவ வேண்டாமா?

'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தையே பட்டி டிங்கரிங் பார்த்து ஊர், இடம் மாற்றி சில சின்ன சின்ன நகாசு வேலைகளை செய்து, வசனங்களை புரட்டிப் போட்டு அவசர உப்புமா செய்வது ஏன் பாஸ்?

போலீஸ் ஸ்டேஷன், மைக் போட்டு பேசுவது என எல்லாம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் ரிப்பீட் மேக்கிங் ஸ்டைல்.

ஒரு படம் ஹிட் ஆகிவிட்டதென்று அதே டெம்ப்ளேட்டில் நடிப்பது நல்லாவா இருக்கு?

பொதுவாக படத்தின் கதைத் தன்மைக்காகவும், திரைக்கதை உத்திக்காகவும் ரீமேக் படங்கள் எடுக்கப்படுவதுண்டு. ஆனால், முதல் படம் ஓடிவிட்டதென்று அதையே சக்சஸ் ஃபார்முலாவாக பயன்படுத்திக்கொண்டால் எப்படி சார்?

மற்ற எந்த படத்தையும் ரீமேக் செய்யாமல் தான் நடித்த படத்தையே ரீமேக் செய்வதும், அதை பார்ட் 2 என்று பெருமையாக சொல்லிக்கொள்வதும் ரசனைக்கான விஷயமாக இல்லையே நண்பா. உங்க கிட்ட இன்னும் நெறைய எதிர்பார்க்கிறோம் பாஸ்..!

SCROLL FOR NEXT