சினிமா நட்சத்திரங்களை சந்திப்பதற்காக அவர்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும் ரசிகர்கள் பலரைப் பார்த்திருப்போம். ஸ்ரீனிவாசன் ஜெயசீலன் அவர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர். ரஜினிகாந்தின் ரசிகரான இவர், அவரைச் சந்திக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக குடும்பத்துடன் ஹாங்காங் சென்றிருக்கிறார். அந்த அனுபவத்தைப் பற்றி ஸ்ரீனிவாசன் ஜெயசீலனிடம் கேட்டோம்.
அவர் உற்சாகமாகப் பேசத்தொடங்கினார்:
“நான் 1981-ம் ஆண்டு முதல் ரஜினிகாந்தின் ரசிகராக இருந்துவருகிறேன். அவர் நடித்துள்ள படங்களை பலமுறை பார்த்துள்ளேன். குறிப்பாக ‘எந்திரன்’ படத்தை 21 முறை பார்த்திருக்கிறேன். நான் கத்தே பசிஃபிக் விமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறேன். எங்கள் விமானத்தில் யாரெல்லாம் பயணிக்கவுள்ளனர் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் வசதி எனக்கு இருக்கிறது.
அப்படி ஒரு நாள் பயணிகள் பட்டியலைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அக்டோபர் 27-ம் தேதி ஹாங்காங் செல்லும் விமானத்தில் ரஜினிகாந்த், பிருந்தா, ரத்னவேலு ஆகியோர் பயணம் செய்யப்போவது தெரியவந்தது. இதுபற்றி விசாரித்தபோது, ‘லிங்கா’ படத்தின் பாடல் பதிவுக்காக அவர்கள் செல்வதாக கூறினார்கள்.
27-ம் தேதிக்கு மூன்று நாட்கள் முன்பு, அவர் கள் பயணம் செய்துகொள்ளப் போவதை மீண் டும் ஒருமுறை உறுதிப்படுத்திக்கொண்டேன். அவர்கள் பயணம் செய்வது உறுதியானதும் என் குடும்பத்துடன் ரஜினிகாந்தை சந்திக்க விரும் பினேன். அதற்காக எனக்கும் என் மனைவி ஸ்ரீவித்யா, மகள் ஸ்ரீயா, மகன் ஸ்ரீவிஷ்ணு ஆகியோருக்கும் ரஜினிகாந்த் பயணம் செய்யும் அதே விமானத்தில் டிக்கெட் எடுத்தேன்.
அக்டோபர் 27-ம் தேதி ‘லிங்கா' படக்குழு வினரோடு நானும் ரஜினி சாருக்காக காத்திருந் தேன். அந்த நேரத்தில் ‘லிங்கா' குழுவினருடன் 200 கிலோவுக்கு அதிகமான பொருட்கள் இருந்ததால் அதை விமானத்தில் ஏற்ற முடியாது என்று கூறிவிட்டார்கள். நான் உடனே எங்களிடம் எந்த பொருட்களும் இல்லை என்பதால் எங்கள் 4 பேர் டிக்கெட்டில் அந்தப் பொருட்களை ஏற்ற உதவினேன். அப்படத்தின் உதவி இயக்குநர் கார்த்திக் அதற்காக எனக்கு நன்றி கூற, நான் அவரிடம், ரஜினிகாந்துடன் நாங்கள் புகைப்படம் எடுக்க உதவுமாறு கேட்டேன்.
சென்னை விமான நிலையத்துக்கு ரஜினிகாந்த் வந்ததும் நான் அவரைச் சந்திக்க கார்த்திக் உதவினார். என்னைப் பார்த்ததும் கம்பீரமாக சிரித்தவர், “ வாங்க வாங்க எப்படி இருக்கீங்க” என்றார். நான் என் குடும்பத்தினரும் அவரைப் பார்க்க விரும்புவதைக் கூறினேன். உடனே அவர்களை அழைத்துவரச் சொன்னார்.
என் மகனைப் பார்த்ததும் அவர் எழுந்து அவனை அமரவைத்தார். அந்தக் கணத்தை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து என் குழந்தைகளிடம் சிறிது நேரம் அவர் பேசிக்கொண்டிருந்தார். நாங்கள் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட பிறகு விமானத்தில் ஏறினோம்.
ஹாங்காங் சென்று இறங்கியவுடன், படப்பிடிப்பு குழுவினர் மக்காவ் புறப்பட்டுச் சென்றனர். அதற்கு முன் என்னைப் பார்த்த ரஜினிகாந்த், ‘நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு ‘உங்களோடு புகைப்படம் எடுக்கத்தான் நாங்கள் விமானத்தில் வந்தோம். உடனே சென்னை கிளம்புகிறோம்’ என்றேன். அவர் நெகிழ்ந்து போய் எங்களிடம் இருந்து விடைபெற்றார். நாங்களும் ரஜினியை சந்தித்த மகிழ்ச்சியில் சென்னை திரும்பினோம்” என்றார்.
பேசி முடித்து கிளம்பும்போது ஒரு கண்ணாடி யைக் காட்டிய அவர், “புகைப்படத்தில் ரஜினி சார் ஒரு கண்ணாடி போட்டிருக்கிறார் அல்லவா. அது இது தான்” என்று காட்டிவிட்டு ரஜினி ஸ்டைலில் அதைப் போட்டுக்கொண்டார்.