சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட பி.எம்.டப்ள்யூ காருக்கு அஜித் உரிமையாளர் இல்லை என்று அவரது தரப்பில் இருந்து அறிவித்திருக்கிறார்கள்.
'என்னை அறிந்தால்' படத்தைத் தொடர்ந்து 'வீரம்' சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு மே 7ம் தேதி முதல் சென்னையில் துவங்க இருக்கிறது. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். ஸ்டண்ட் சிவா வடிவமைக்கும் சண்டைக் காட்சிகளோடு படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 28) காலை முதலே சமூக வலைத்தளத்தில் அஜித் புதிதாக பி.எம்.டப்ள்யூ ஹைபிரிட் ஐ8 என அழைக்கப்படும் உயர் ரக கார் ஒன்றை வாங்கியிருக்கிறார் என்று தகவல்கள் பரவின. அந்தக் கார் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக வந்த போது என்று புகைப்படங்களும் வெளியானது. காரின் புகைப்படங்களோடு இச்செய்தி வேகமாக பரவியது.
"இன்று காலை பி.எம்.டபுள்யூ கார் வாங்கியிருக்கிறார் அஜித் என்று செய்திகள் பரவி வருகிறது. அச்செய்தியில் உண்மையில்லை. தேவையில்லாத செய்திகளை பரப்ப வேண்டாம்" என்று அஜித் தரப்பில் இருந்து அறிவித்திருக்கிறார்கள்.