தமிழ் சினிமா

அறுந்த ரீலு 5 - தனுஷின் விஐபி ரகுவரனுக்குப் பின்னால்...

ஸ்கிரீனன்

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் நாயகனின் பெயர் ரகுவரன் என்று வைத்ததற்கு பின்னால் ஒரு ரகசியம் இருக்கிறது!

தனுஷ் - மறைந்த நடிகர் ரகுவரன் இருவரும் இணைந்து 'யாரடி நீ மோகினி' படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் தனுஷைக் கட்டிப்பிடித்து "நீ என் மகன் மாதிரி" என்று கூறியிருக்கிறார் ரகுவரன்.

முதல் நாள் என்பதால் தனுஷ் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து தினமும் படப்பிடிப்பில் "நீ என் மகன் மாதிரி" என்று தெரிவித்துக் கொண்டே இருந்திருக்கிறார் ரகுவரன்.

ரகுவரன் மறைந்த பிறகு அவருடைய வீட்டுக்கு சென்றிருக்கிறார் தனுஷ். அப்போது அவரது வீட்டில் இருந்தவர்கள் ஒரு சிறிய சாய்பாபா சிலை ஒன்றைக் கொடுத்து, இதை உங்களிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அப்போது தான் தனுஷுக்கு, மறைந்த ரகுவரன் தன்னை மனதளவில் இருந்து "நீ எனக்கு மகன் மாதிரி" என்று சொல்லியிருக்கிறார் என்று தெரிந்திருக்கிறது.

மேலும், 'வேலையில்லா பட்டதாரி' படத்துக்கு முதலில் ரகுவரன் என்று தலைப்பு வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், பல்வேறு காரணங்களால் நாயகன் பாத்திரத்துக்கு ரகுவரன் என்று பெயர் வைத்து, படத்துக்கு 'வேலையில்லா பட்டதாரி' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT