தமிழ் சினிமா

ராகவா லாரன்ஸை பாராட்டிய விஜய்

செய்திப்பிரிவு

'காஞ்சனா -2' படத்தின் ஹிட் பற்றி கேள்விப்பட்ட விஜய், ராகவா லாரன்ஸை தனது வீட்டுக்கு அழைத்துப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'முனி', 'காஞ்சனா' வரிசையில் ’காஞ்சனா- 2’ படத்தை இயக்கினார் ராகவா லாரன்ஸ். 'காஞ்சனா -2' திரைப்படத்தில் டாப்ஸி, நித்யா மேனன், மனோபாலா, ஸ்ரீமன், மயில்சாமி, கோவை சரளா, சுஹாசினி, ஜெயப்பிரகாஷ், 'நான் கடவுள்' ராஜேந்திரன் ஆகியோர் நடித்தனர். லாரன்ஸ் இரட்டை வேடங்களில் நடித்தார்.

சமீபத்தில் வெளியான 'காஞ்சனா- 2' படத்துக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது இப்படத்தில் 7 வயது சிறுமி முதல் 70 வயதான பாட்டி தோற்றம் வரை பல்வேறு கெட்டப்புகளில் நடித்த லாரன்ஸூக்கு பாராட்டுகள் குவிகின்றன.

ஏற்கெனவே படத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட ரஜினி, ''உனக்கு அந்த ராகவேந்திரர் ஆசி எப்போதும் உண்டு. இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும்" என்று பாராட்டினார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இத்திரைப்படம் வசூலை வாரிக் குவிக்கிறது.

இந்நிலையில், விஜய்யும் ராகவா லாரன்ஸை தன் வீட்டுக்கு அழைத்துப் பாராட்டியுள்ளார். இதனால் லாரன்ஸ் உற்சாகத்தில் இருக்கிறார்.

SCROLL FOR NEXT