ரஜினிகாந்த் நடித்து வெள்ளிக்கிழமை வெளியான கோச்சடையான் திரைப்பட போஸ்டரில், ‘2016-ல் கோட்டையில் எங்கள் கோச்சடையான் ஆட்சி உறுதி’ என்ற போஸ்டரை மாநகரம் முழுவதும் ரசிகர்கள் ஒட்டி, அவரை அரசியலுக்கு இழுக்க அச்சாரம் போட்டுள்ளனர்.
ரஜினிகாந்த் அவ்வப்போது, அரசியல் பேசி பரபரப்பை ஏற்படுத்தி விட்டு, அமைதியாகி விடுவார். அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற மிகப்பெரும் கேள்விக்கு விடை கிடைக்காமல் ரசிகர்கள் விழித்துக் கொண்டு இருக்கின்றனர்.
எப்படியும் ரஜினிகாந்த் அரசியலில் காலடி எடுத்து வைப்பார் என்ற நம்பிக்கையில், அவரது படம் வெளி வரும் சமயங்களில், அரசியல் சார்ந்த போஸ்டரை ஒட்டி, அரசியலுக்குள் அவரை இழுக்க அச்சாரமிட்டு வருகின்றனர்.
தற்போதும், கோச்சடையான் படம் திரைக்கு வந்ததையொட்டி, மாநகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
பல ஆயிரம் ரசிகர் மன்றங்களைக் கொண்டுள்ள ரஜினி, அரசியலில் மிகப்பெரும் மாற்று சக்தியாக விளங்குவார் என்று ரசிகர்கள் நம்பிக் காத்திருக்கின்றனர்.
கிடா வெட்டி கொண்டாடினர்
சேலம் 5 ரோடு கௌரி தியேட்டரில் கோச்சடையான் படம் வெளியிடப் பட்டது. ரசிகர்கள் ரஜினியின் உருவம் பொறித்த பனியன் அணிந்து ஊர்வலமாக வந்தனர். ரசிகர்கள் பால், சந்தனம், மஞ்சள் குடம் எடுத்து கொண்டு வந்தனர். தியேட்டர் முன்பு ரஜினியின் கட் அவுட்டுக்கு அபிஷேகம் செய்தனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று கிடா வெட்டப்பட்டது. 101 தேங்காய், 5 பூசணிக்காய் உடைக்கப்பட்டது.