சினிமா விமர்சனம் எழுதுவதற்கான தகுதிகள் பற்றிய சுஹாசினியின் பேச்சுக்கு, இயக்குநர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.
'ஓ காதல் கண்மணி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சுஹாசினி மணிரத்னம் நிகழ்த்திய நன்றியுரை பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
"மவுஸை மூவ் பண்ணத் தெரிந்தவர்கள் எல்லாம் விமர்சகர்களாகி விட்டார்கள். விமர்சனம் எழுதத் தெரிந்தவர்கள் மட்டுமே விமர்சனம் பண்ண வேண்டும்" என்று சுஹாசினி பேசினார்.
சுஹாசினியின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தொடர்ச்சியாக சுஹாசினிக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வந்தார்கள்.
இந்நிலையில், சுஹாசினி கருத்து குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் இயக்குநர் மணிரத்னம் அளித்த விளக்கம்:
"சுஹாசினியின் கருத்தை அவர் சொன்ன விதத்திலேயே ஆராய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் தனது கருத்தை சரியாக பதிவு செய்யாமல்கூட இருந்திருக்கலாம்.
சுஹாசினி, தொழில்முறை விமர்சனத்தைப் பற்றியே பேசினார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் இதுவரை எங்கள் படங்களை எப்படி ஆதரிப்பார்கள்... அதேபோல் ஆதரிக்க வேண்டும் என்றே கோரியிருந்தார்.
சுஹாசினி உட்பட யார் என்ன சொன்னாலும் சரி, மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஒரு படத்தை உருவாக்கினால் அதைப் பற்றி என் சொந்த கருத்து இருக்கும். அந்தப் படத்தை பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். ஆனால், நிச்சயம் அதை ஒட்டிய கருத்து ஒன்று இருக்கும்.
சினிமா என்பது பொதுப்படையான கலை. அதை விமர்சிக்க மக்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. இன்றைய சூழலில் மக்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள பல்வேறு தளங்கள் இருக்கின்றன. இந்தத் தளங்கள் இன்னும் பல மடங்குகூட அதிகரிக்கலாம். எனவே விமர்சனங்களை நாம் பின்னூட்டமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தப் படத்தை உருவாக்கும் போது அவற்றை பயன்படுத்திக் கொண்டு தரத்தை மேம்படுத்த வேண்டும்.
விமர்சனங்கள் எப்போதுமே இருக்கும். ஆனால், அது எப்படி முன்வைக்கப்படுகிறது என்பதிலேயே வித்தியாசம் இருக்கிறது. தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துவிட்டு ஒரு வீரர் எவ்வளவு நேர்த்தியாக விளையாடுகிறார் என நான் விமர்சிக்கலாம். எனக்கு கிரிக்கெட் கமென்ட்ரி எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாது இருந்தால் நான் விமர்சிக்கிறேன். அதேபோல், சினிமா பார்க்கும் அனைவருக்கும் அதைப் பற்றிச் சொல்ல ஏதாவது கருத்து இருக்கும். ஆனால், விமர்சனங்கள் எதிர்வினையை தூண்டிவிடக் கூடாது. அத்தகைய போக்கு ஆன்லைனில் நிலவுகிறது.
நேர்மையான விமர்சனங்கள் எப்போதுமே வரவேற்பைப் பெறும். 'கடல்' பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அதனால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் அதை என் பாணியில் எடுத்துக் கொண்டேன்" என்று தெரிவித்திருக்கிறார் மணிரத்னம்.