தமிழ் சினிமா

அனேகன் ஒளிபரப்பு: ஆவேசப்பட்ட ரசிகர்களை அமைதிப்படுத்திய தனுஷ்

ஸ்கிரீனன்

தமிழ் புத்தாண்டு அன்று தனியார் தொலைக்காட்சியில் 'அனேகன்' ஒளிப்பரப்பு ஆவதால் கோபமடைந்த ரசிகர்களை அமைதிப்படுத்தினார் தனுஷ்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா, கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அனேகன்'. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் மக்களிடையேயும், விமர்சகர்கள் மத்தியிலும் வரவேற்பு பெற்றது. 'அனேகன்' திரைப்படம் சமீபத்தில் தான் 50 நாட்களை கடந்தது.

இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கியிருக்கும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம், தமிழ் புத்தாண்டு அன்று ஒளிபரப்ப திட்டமிட்டு இருக்கிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் பலரும் இச்செயலுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், "அனேகன் ஒளிபரப்பு குறித்து எனது ரசிகர்களை அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தயாரிப்பு நிறுவனத்துக்கும், தொலைக்காட்சிக்கும் என்ன ஒப்பந்தம் என்பது எனக்கு தெரியாது. அதனால் நான் கருத்துக்கூற விரும்பவில்லை.

படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. அது தான் முக்கியம். அப்படம் ஒளிபரப்பப்பட்டால் இன்னும் அதிகமான பேர் அப்படத்தை ரசிப்பார்கள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT