தமிழ் சினிமா

இணையத்தில் கசிந்த புலி விஜய் போட்டோ: படக்குழு அதிர்ச்சி

ஸ்கிரீனன்

விஜய் நடித்துவரும் 'புலி' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழு பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'புலி'. ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் விஜய்யோடு நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக், இசை வெளியீடு, படம் வெளியீடு என எந்த தேதியையும் படக்குழு இன்னும் தீர்மானிக்கவில்லை. முதலில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, பிறகு தீர்மானிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், 'புலி' படத்திற்கான கெட்டப்புடன் விஜய் நடந்து வருவது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறது.

'புலி' படத்தில் நடித்துவரும் வித்யூலேகா ராமன் "'புலி' படத்தின் புகைப்படங்கள் கள்ளத்தனமாக வெளியானது எரிச்சலாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. படக்குழு அனைவரும் மனவருத்தத்தில் உள்ளனர். யார் இதைச் செய்தது என விசாரித்து வருகின்றனர்.

அனைவருக்காகவும் 'புலி' முதல் பார்வை தயாராகி வருகிறது. ஆனால் 6 மாதங்கள் பாதுகாத்தபின் கடைசி நிமிடத்தில் இப்படி நடப்பது சங்கடமாக இருக்கிறது." என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

'புலி' படத்தின் முதல் புகைப்படம் என்பதால் சமூக வலைத்தளத்தில் பலரும் அப்படத்தை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT