தமிழ் சினிமா

உண்மையான டி.ஆர் ரசிகனுக்கு இந்த நிலைமையா? - ரோமியோ ஜுலியட் இயக்குநர் வேதனை

ஸ்கிரீனன்

உண்மையான டி.ஆர்.ரசிகனுக்கு இந்த நிலைமையா என்று 'ரோமியோ ஜுலியட்' இயக்குநர் லக்ஷ்மன் வேதனையுடன் தெரிவித்தார்

ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில், புதுமுக இயக்குநர் லக்ஷ்மன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் 'ரோமியோ ஜூலியட்'. இப்படத்திற்காக இமான் இசையில், அனிருத் பாடியுள்ள "டண்டணக்கா" என்ற பாடல் வைரல் ஹிட் ஆகியுள்ளது. இது நடிகர் டி.ராஜேந்தரைப் போற்றும் விதத்தில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே படத்தில் உள்ளது என படக்குழுவைச் சேர்ந்த பலரும் விளக்கம் தெரிவித்துள்ளனர். ஆனால், டி.ராஜேந்தர் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

"இந்தப் பாடல் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே உள்ளது என படக்குழு தெரிவித்தாலும், இந்தப் பாடலை வைத்து பலபேர் டி.ராஜேந்தரை நையாண்டி செய்து, புதிய வீடியோக்கள், மீம்கள் என பதிவேற்றி வருகின்றனர். இது அவரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என டி.ராஜேந்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நோட்டீஸ் குறித்து இயக்குநர் லக்ஷ்மனிடம் கேட்ட போது, "நான் ஒரு டி.ஆரின் ரசிகன். அதனால் தான் என் படத்தில் நாயகனை டி.ஆரின் ரசிகனாக வைத்தேன். அப்பாடலில் நாங்கள் டி.ஆரை எந்த ஒரு விதத்திலும் சிறுமைப்படுத்தவில்லை. ஆனால், டி.ஆர் சார் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

அந்த நோட்டீஸுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று பலமுறை தொடர்பு கொண்டும் சந்திக்க மறுக்கிறார். ஒரு உண்மையான டி.ஆரின் ரசிகனுக்கு இந்த நிலைமையா என்று மிகுந்த வேதனையில் இருக்கிறேன்.

தற்போது 'டண்டணக்கா' பாடலின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் அப்பாடலை டி.ஆருக்கு திரையிட்டுக் காட்டத் திட்டமிட்டுள்ளோம். இரண்டு விதமாக படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். இரண்டையும் டி.ஆரிடம் போட்டுக் காட்டி, டி.ஆருக்கு எது சந்தோஷமோ அது படத்தில் இடம்பெறும்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT