தமிழ் சினிமா

3-வது முறையாக இணையும் கார்த்தி - தமன்னா

ஸ்கிரீனன்

'பையா', 'சிறுத்தை' படத்தைத் தொடர்ந்து கார்த்தி, தமன்னா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

நாகார்ஜுன், கார்த்தி நடிக்க தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகும் படத்தை பி.வி.பி நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் நாயகியாக முதலில் ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படத்தின் பூஜை நடைபெற்றது.

இந்நிலையில், ஸ்ருதிஹாசன் இப்படத்தில் இருந்து விலக படக்குழு அவர் மீது வழக்கு ஒன்றைத் தொடுத்திருக்கிறது. இதனால் ஸ்ருதிஹாசன் வேடத்தில் நடிக்கவிருப்பது யார் என்பதில் குழப்பம் நிலவியது.

படப்பிடிப்பு அனைத்தையும் திட்டமிட்டப்படி நடத்த முடியுமா என்று யோசனையில் படக்குழு இறங்கியது. தயாரிப்பு நிறுவனம் சார்பில் வேறு நாயகிகளிடமும் ஸ்ருதிஹாசன் கொடுத்த தேதிகள் இருக்கிறதா என்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக தமன்னாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

'பையா', 'சிறுத்தை' ஆகிய படங்களில் கார்த்தி, தமன்னா இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இருவரும் இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் இது. இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT