தமிழ் சினிமா

தேசிய விருதுக்கான வரைமுறைகள் தெரியவில்லை: தயாரிப்பாளர் சி.வி.குமார் நேர்காணல்

கா.இசக்கி முத்து

தமிழில் தற்போது வெற்றிகரமான தயாரிப்பாளர்களின் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில் ‘அட்டக்கத்தி’, ‘பீட்சா’, முண்டாசுப்பட்டி’ ‘தெகிடி’ என்று வரிசையாக வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னேறி வருகிறார் தயாரிப்பாளர் சி.வி.குமார். அடுத்ததாக படங்களை இயக்கவும் திட்டமிட்டுள்ள அவரைச் சந்தித்தோம்.

தயாரிப்பைத் தொடர்ந்து நீங்கள் இயக்குநராகவும் அவதாரம் எடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகிறது. நீங்கள் இயக்குநராவதற்கு என்ன காரணம்?

தொடர்ச்சியாக தயாரிப்பை கவ னித்து வருவதால் ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வது போல் தோன்றுகிறது. வாழ்க்கையில் புதிதாக ஏதாவது பண்ண வேண்டும் என்றுதான் இந்த துறைக்கே வந்தேன். தயாரிப்பில் இருக்கும் நுணுக்கங்களையெல்லாம் தெரிந்துகொண்டேன். இப்போது இயக்கம் என்னவென்று பார்ப்போமே என்று முயற்சி செய்யவுள்ளேன். இதற்காக 3 கதைகளை எழுதி வைத்தி ருக்கிறேன். அதில் எதை இயக்குவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

திரையரங்கு கிடைக்காததால் நிறைய படங்கள் வெளியாகாமல் இருக்கிறது. ஆனால் நீங்கள் தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் திரையரங்குகள் கிடைப்பது எப்படி?

நான் திரையுலகுக்கு வந்த சமயத்தில் இப்பிரச்சினை இல்லை. காலப்போக்கில் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு மதிப்பு வந்திருக்கிறது. அத னால்தான் எனது படங்களுக்கு இப்பிரச் சினை வருவதில்லை. நான் அப்போது வராமல் இப்போது திரையுலகுக்கு வந்திருந்தால், எனக்கும் திரையரங்கு கள் கிடைத்திருக்காது.

தமிழ் சினிமா தற்போது நெருக்கடியான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இப்போது மக்கள் திரையரங்குக்கு வருவது குறைந்துவிட்டது, படங்களுக்கும் லாபம் கிடைப்பதில்லை. இந்த வருடத்தின் இறுதிக்குள் படத் தயாரிப்பே குறைந்துவிடும் என்று தோன்றுகிறது. நாங்களும் இந்த வருடத்தின் இறுதியில் படத் தயாரிப்பை குறைத்துக் கொள்ள திட்டமிட்டிருக்கிறோம்.

உங்கள் நிறுவனம் தயாரிக்கும் படங்கள் வசூலில் சாதனை புரிந்தாலும் அவற்றுக்கு தேசிய விருதுகள் கிடைப்பதில்லையே?

தேசிய விருதுக்கு என்ன வரைமுறை களை வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இதற்காக அமர்ந்து படம் பார்க்கும் 10 பேருக்கு மட்டும் படம் பிடித்தால் போதும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு பிடித் தால் தேசிய விருது கிடைக்கும். பிடிக்காவிட்டால் விருது கிடைக்காது. அவ்வளவுதான். எனக்கு விருதுகள் மீதெல்லாம் நம்பிக்கையில்லை. சினிமா என்பது ஒரு வியாபாரம். எனக்குத் தெரிந்த பாதையில் நான் பயணித்துக்கொண்டு இருக்கிறேன். எனக்குத் திருப்தி தரக்கூடிய கதைகளை படமாக எடுக்கிறேன். அதை மக்களும் ரசிக்கிறார்கள், லாபமும் கிடைக்கிறது.

நீங்கள் தனியாக படங்களை எடுக்காமல் எதற்காக கூட்டு முயற்சியில் படங்களை எடுக்கிறீர்கள்?

நான் தனியாகத்தான் படங்களை தயாரிக்கிறேன். மற்றவர்கள் என் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து அந்தப் படங்களை வாங்கிக் கொள் கிறார்கள் அவ்வளவுதான். எனக்கு நல்ல கதை எது என்று தேர்ந்தெடுத்து தயாரிக்கத் தெரியும். ஆனால் வியாபாரத்தில் எனக்கு அறிவு கிடை யாது. ஆகையால், அதை தெரிந்த நபர்களிடம் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?

உங்கள் அடுத்தகட்ட திட்டம் என்ன?

‘தெகிடி’ படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. இந்த வருட இறுதிக்குள் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் எங்கள் நிறுவனம் தனது கிளைகளை விரிவாக்க திட்டமிட்டு இருக்கிறது. ஏற்கெனவே ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலமாக இந்தியில் எங்களது நிறுவனம் காலூன்றி உள்ளது.

பெரிய நடிகர்கள், இயக்குநர்களை வைத்து படங்களைத் தயாரிக்காதது ஏன்?

நான் சினிமாத் துறையில் இப்போது தான் வளர்ந்துகொண்டிருக்கிறேன். இந்நிலையில் பெரிய நட்சத்தி ரங்களோடு படம் பண்ணும்போது, ஏதும் கருத்து மோதல் வந்துவிடக் கூடாதே என்ற தயக்கமே இதற்கு காரணம். அவர்களை வைத்து படம் பண்ணி, பட்ஜெட் அதிகமாகி, அதனால் வரும் பிரச்சினைகளை தாங்கிக்கொள்ள முடியுமா என்ற பயமும் மற்றொரு காரணம்.

‘அட்டகத்தி’ படத்தை உங்கள் வீட்டுக்கு தெரியாமல் தயாரித்ததாக கூறியுள்ளீர்கள். நீங்கள் சினிமாவில் இருப்பது பற்றி இப்போது உங்கள் வீட்டில் என்ன நினைக்கிறார்கள்?

‘ஆசைக்கு படம் பண்ணு, மீதி நாள் இங்கு வந்து குடும்பத்தோடு நேரத்தை செலவழி’ என்று தான் சொல்கிறார்கள். எனது குழந்தைகளுக்கு அப்பா படம் பண்ணுகிறார் என்று மட்டும் தெரியும். என்னுடைய நிழல் அவர்கள் மீது படிந்துவிடக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

SCROLL FOR NEXT