உதயநிதி நடித்த மூன்றாவது படமான 'நண்பேன்டா' திரைப்படம் ஏப்ரல் 2 அன்று ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், படம் குறித்தும், சினிமா குறித்தும் சில அனுபவங்களை உதயநிதி பகிர்ந்துகொண்டார்.
நீங்களும் சந்தானமும் சேர்ந்த காமெடி படம் மட்டும் தான் பண்ணுவீங்களா?
நானும், சந்தானமும் கூட்டணி சேரும்போது எங்ககிட்ட அதைத்தான் எதிர்பார்க்கிறாங்க. 'இது கதிர்வேலன் காதல்' படம் பண்ணிட்டுப் பார்த்தா ரெண்டு பேரும் பண்ணியிருக்கீங்க. ஆனா, காமெடி கம்மியா இருக்கே. எதுக்கு தேவையில்லாம சென்டிமென்ட்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்கன்னு சொன்னாங்க.
ஜெகதீஷ் ராஜேஷ் சார் ஸ்கூல்ல இருந்து வந்தவர். வரிசையா சீரியஸான படங்கள் வந்துகிட்டு இருக்கு. இந்தப் படம் குடும்பத்தோட ரெண்டரை மணிநேரம் ஜாலியா பார்க்குற பொழுதுபோக்கு படமா இருக்கும்.
உங்க தயாரிப்பில் நீங்களே நடிப்பது நல்லதா?கெட்டதா?
கெட்டதுன்னு எதுவும் நினைக்கலை. நல்லதுன்னா நான் தயாரிக்கும்போது ஹாரீஸ் ஜெயராஜ் சார், பாலசுப்பிரமணியன் சார் என என்னோட படக்குழுவை நானே தேர்வு செய்ய முடிகிறது.
வரிவிலக்கு பிரச்சினைகள்?
அரசியல் குடும்பப் பின்னணியில் இருப்பதால் என் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது. என்ன காரணம்னு எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். என்னோட முதல் படத்தில் இருந்து தயாரிக்கப்படுகிற படங்கள் அனைத்துக்கும் வரிவிலக்கு நிராகரிக்கப்படுகிறது. இத்தனைக்கும் தணிக்கைத் துறை யு சான்றிதழ் கொடுத்தும் வரிவிலக்கு கிடைப்பதில்லை. இது குறித்த வழக்கு தொடுத்துள்ளேன்.
வரிவிலக்குக் குழுவில் 22 பேரில் ஆறு அல்லது ஏழு பேர்தான் படம் பார்க்கிறார்கள். தமிழ் டைட்டில் இல்லாத படங்களுக்குக் கூட வரிவிலக்கு கொடுக்கிறார்கள். தமிழ் டைட்டில், ஆங்கில டைட்டில் எது என்று தெரியாதவர்கள் வரிவிலக்குக் குழுவில் இருக்கிறார்கள்.
நீங்கள் ரீமேக் செய்ய விரும்பும் படம்?
என் படத்தையே நான் ரீமேக் பண்ணிக்கிட்டு இருக்கேன். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தோட ரீமேக்தான் ’நண்பேன் டா’ என சொல்லலாம். அந்த அளவுக்கு ஜாலியான படம். 'ஆண் பாவம்' படத்தை ரீமேக் செய்ய ஆசை. படம் முழுக்க காமெடி இருக்கும். பாண்டியராஜன் சார், பாண்டியன் சார், வி.கே ராமசாமி சார் கேரக்டர்னு படம் அவ்ளோ நல்லா இருக்கும்.
'கெத்து' படம் பற்றி?
எமி ஜாக்சன் ஹீரோயின். திருக்குமரன் சார் டைரக்ஷன். முருகதாஸ் சார் டிஸ்கஷனில் கலந்துகொண்டு ஊக்குவித்தார். சத்யராஜ் சார் என் அப்பாவாக நடிக்கிறார். சந்தானம் இந்தப் படத்தில் இல்லை. கருணாகரனுடன் இணைந்து காமெடி செய்கிறேன். ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க இந்தப் படத்தில் முயற்சித்துள்ளேன்.
இன்றைய சூழலில் சினிமா தயாரிப்பது எவ்வளவு பெரிய ரிஸ்க்?
மிகப்பெரிய ரிஸ்க். வருஷத்துக்கு கிட்டத்தட்ட 150 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. வருடங்கள் தோறும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 10 படங்கள் நல்லா ஹிட்டாகுது. 5 படங்கள் லாபம் சம்பாதிக்குது. வாராவாரம் ஆறேழு படங்கள் ரிலீஸ் ஆகிறது. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் நல்ல படம். சின்ன பட்ஜெட் படம். நான் ரிலீஸ் பண்ணேன். அந்தப் படம் பெரிய அளவில் ஹிட் ஆகியிருக்கிறது.
ஒரு நல்ல படம் ரிலீஸ் ஆகி, மக்களிடம் நன்றாக இருக்கிறது என்கிற கருத்து சென்றடைய கொஞ்ச நேரம் ஆகும். அந்த நேரம் பெரும்பாலான படங்களுக்குக் கிடைப்பதில்லை. படங்களின் ரிலீஸ் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும்.'' என்றார் உதயநிதி.