தமிழ் சினிமா

பாலியல் கல்வியே இன்றைய தேவை: திரைப்பட இயக்குநர் ராம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறும் நிலையில், கல்வி நிலையங்களில் பாலியல் குறித்த கல்வியை போதிப்பது, இந்தியாவின் இன்றைய தேவை என திரைப்பட இயக்குநர் ராம் தெரிவித்தார்.

கோவை அரசு கலைக் கல்லூரியின் தமிழ் உயராய்வுத்துறை தமிழ்மன்ற நிறைவு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் குமரேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் இயக்குநர் ராம் பேசியதாவது: வாழ்க்கை முறையை கற்றுத்தருவது தமிழ் மொழியே. நான் ஒரு சராசரி தமிழ் மாணவன்தான். ஆனால், தமிழ்த்துறையின் ஆய்வாளராக ஆக வேண்டும் என்கிற விருப்பம் எனக்கிருந்தது.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் திரையுலகத்துக்கு வந்து விட்டேன். நான் இயக்கிய, கற்றது தமிழ், தங்க மீன்கள் இரண்டும் யாருக்கும் புத்தி சொல்வதற்காக உருவாக்கப்படவில்லை. அது முழுக்க என்னுடைய சுயநலனுக்காகவே எடுத்தது. தமிழன் வாழ்க்கை முறை குறித்து எந்த ஆவணப்படமும் இதுவரை இல்லை. மருத்துவம், பொறியியல் போன்றவை குறித்த பாடப்புத்தகங்கள் தமிழ் மொழியில் கிடையாது. சொற்பமான படைப்பாளிகளே தமிழில் உள்ளனர். இலக்கியத்துக்கு மொழி வித்தியாசம் கிடையாது. தமிழை சகல துறைகளிலும் நவீன முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அத்தகைய ஞானத்தை மாணவர்கள் பெருக்க வேண்டும்.

இந்தியாவில் 23 நிமிடத்துக்கு 94 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சினிமா பார்த்து மாணவர்கள் கெட்டுவிட்டார்கள் என்பதை ஏற்க முடியாது. சினிமாவில் வரும் ஆடல் பாடல்கள் ஆதிக்கலையைச் சேர்ந்தது என்ற பார்வையிலே அதை பார்க்க வேண்டும். கருத்தை வெளியே பேசக்கூடிய பெண்கள் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர்.

டாஸ்மாக் விற்பனையால் பாதிக்கப்பட்ட அளவுக்கு, சினிமா சீரழிக்கவில்லை. பெண்கள் மீதான குற்றங்களைத் தடுக்க பாலியல் குறித்த பாடத்திட்டத்தை உடனடியாக கல்வி நிலையங்களில் கொண்டு வர வேண்டும். அதுவே இன்றைய இந்தியாவின் முக்கிய தேவையாக உள்ளது என்றார்.

அரசுக் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் அரங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT