‘எனக்குள் ஒருவன்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமாகிறார் கன்னட நடிகை தீபா சன்னிதி. இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே ஆர்யாவுடன், ‘யட்சன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தன் முதல் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீபா சன்னிதியைச் சந்தித்தோம்.
‘எனக்குள் ஒருவன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது?
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கர்நாடகாவில்தான். கல்லூரியில் படிக்கும் போது சேலை விளம்பரங்களில் நடித்தேன். அந்த விளம்பரங்கள் மூலமாக ‘சாரதி’ என்ற கன்னடப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. புனித் ராஜ்குமார், தர்ஷன் என முன்னணி நாயகர்களோடு 5 கன்னடப் படங்களில் நடித்துள்ளேன்.
‘எனக்குள் ஒருவன்’ படத்தில் நடிப்பதற்கு முன்பே நான் கன்னடத்தில் வெளியான ‘லூசியா’ படத்தைப் பார்த்திருந்தேன். அப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை தமிழில் எடுக்கப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் நான் அதில் நடிக்க விரும் பினேன். அதற்காக என் புகைப்படங்களை அனுப்பி வைத்தேன்.
நடிகையர் தேர்வுக்கு வந்து தேர்வானேன். கன்னடத்தில் ஸ்ருதி நடித்த பாத்திரத்தை நான் தமிழில் செய்திருக்கிறேன். இந்தப் படத்தில் நான் இரண்டு வேடங்களில் நடித் துள்ளேன். இது கண்டிப் பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்பு கிறேன்.
சித்தார்த்துடன் முதல் படத்தில் நடிக்கும் அனுபவம் எப்படி இருந்தது?
படப்பிடிப்பின்போது சித்தார்த் எனக்கு மிகவும் உதவினார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகராக இருந்தும் எந்த பந்தாவும் இல்லாமல் அவர் என்னுடன் பழகினார். இப்படத்துக்கான அவருடைய உழைப்பைப் பார்த்து நான் மிரண்டுவிட்டேன். ஒவ்வொரு காட்சியையும் அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்திருக்கிறார்.
ஆர்யாவுடன் இரண்டாவது படத்தில் நடிக்கிறீர்கள். அவருடன் யார் இணைந்து நடித்தாலும் கிசுகிசுக்கள் வருவது வழக்கம். அவற்றை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?
கன்னடத்தில் நடிக்கும்போது என்னைப் பற்றி கிசுகிசு செய்திகள் வந்தது. அப்போது நான் மிகவும் அதிர்ச்சியானேன். ஆனால், இப்போது அதெல்லாம் சகஜமாகிவிட்டது. என்னைப் பற்றி கிசுகிசுக்கள் வந்தால் அதைப் பார்த்துவிட்டு சிரிப்பேன். அவ்வளவுதான்.
ஆர்யா, தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கெல்லாம் பிரியாணி கொடுப்பார் என்றார்கள். ஆனால் இதுவரை எனக்குக் கொடுக்கவில்லை. ஏனென்று ஆர்யாவிடம் கேட்டுச் சொல்லுங்கள்.
எப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?
என்னுடைய பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட வேடம் கிடைத்தால் புதுமுக நாயகர்களுடனும் நடிக்கத் தயார். அதேபோல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள காட்சிகளில் கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை என்பது என் கருத்து. அதே நேரத்தில் ரொம்ப கவர்ச்சியாகவும் நடிக்க மாட்டேன்.
எந்த மாதிரியான நடிகையாக பெயரெடுக்க விரும்புகிறீர்கள்?
குறிப்பிட்டு எந்த நடிகை மாதிரியும் வரவேண்டும் என்ற ஆசை இல்லை. மக்கள் என்னை ஒப்புக் கொண்டால் மட்டும் போதும். மற்றவர்கள் மாதிரி வரணும் என்பதைவிட, எனக்கான பாதையை நான் தெளிவாக அமைத்துக் கொள்ள விரும்புகிறேன்.
சிலர் நயன்தாராவோடு என்னை ஒப்பிடுகிறார்கள். அவர் ஒரு அற்புதமான நடிகை. அவரோடு என்னை ஒப்பிடுவது தவறானது. நயன்தாரா மட்டுமல்ல. யாருடைய இடத்தையும் யாரும் பிடித்துவிட முடியாது. இன்னொரு நயன்தாரா, இன்னொரு குஷ்பு என்று பார்ப்பது தவறு.
உங்களின் பொழுதுபோக்கு என்ன?
எனக்கு கவிதைகள் எழுதுவது ரொம்ப பிடிக்கும். சோகம், துக்கம், சந்தோஷம் என்று எல்லாவற்றையும் கவிதையாக சொல்லலாம். நான் ஆங்கிலத்தில் கவிதைகளை எழுதுவேன்.