தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திறமையுள்ள பெரும்பாலானோருக்கு விருது கிடைப்பதில்லை என்றும், ஒரு சிலருக்கு மட்டுமே விருது கிடைக்கிறது என்றும் இயக்குநர் பார்த்திபன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
62-வது தேசிய விருதுகள் பட்டியல் டெல்லியில் அறிவிக்கப்பட்டது. இப்பட்டியலில் தமிழில் சிறந்த படமாக 'குற்றம் கடிதல்', சிறந்த உறுதுணை நடிகராக 'பாபி சிம்ஹா', சிறந்த குழந்தைகள் படமாக 'காக்கா முட்டை' என தமிழ்ப் படங்களுக்கு 7 விருதுகள் கிடைத்திருக்கிறது.
தேசிய விருது தேர்வுக்கு இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' திரைப்படம் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், அப்படத்துக்கு எந்த ஒரு விருதும் கிடைக்கவில்லை. இதற்கு, இயக்குநர் பார்த்திபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
"'The wolf of wall street' படத்தில் லியானார்டோ டி காப்ரியோ-வுக்கு ஆஸ்கார் கிடைக்குமென நாடே காத்திருக்க, டி காப்ரியோ 10 வருடங்களாக அதற்காக வித்தியாசமான வேடங்களில் பின்னி/மின்னி ஆவலோடு காத்திருக்கிறார்.
திறமையுள்ள அனைவருக்கும் விருது கிடைப்பதில்லை, ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது விருது.
எனக்கும் 'மேல்விலாசம்' என்ற மலையாளப்படம்,'ஆயிரத்தில் ஒருவன்' படங்களில் சிறந்த நடிப்புக்கும், ’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ சிறந்த இயக்குநர், திரைக்கதை இப்படி சில விருதுகள் கிடைத்திருக்கலாமென பாராட்டி மக்கள் 'பேசிய விருது' தேசிய விருதுக்கு ஒப்பானது.
இருப்பினும் தொடரும் உங்கள் ஆதரவோடு தொடர்கிறேன் என் வித்தியாச முயற்சிகளை. நன்றி" என்று பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.