சூர்யா நடித்துவரும் 'மாஸ்' படத்துக்கு தமன் இசையமைத்திருக்கும் பாடலின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'மாஸ்'. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
வெங்கட்பிரபு இயக்கிய அனைத்து படங்களுக்குமே யுவன் தான் இசையமைத்திருக்கிறார். ஆனால், இப்படத்தில் யுவன் கொடுத்த பாடல்கள் சூர்யாவுக்கு பிடிக்கவில்லையாம். அதுமட்டுமன்றி, பாடல்கள் சீக்கிரமாக கொடுத்திருந்தால் படப்பிடிப்பு எப்போதோ முடிந்திருக்கும் என்பதால் கடும் கோபத்தில் இருக்கிறார் சூர்யா என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் 'மாஸ்' படத்தின் கடைசிப் பாடலை இசையமைப்பாளர் தமனை அழைத்து பண்ணச் சொல்லியிருக்கிறார் சூர்யா. அவரும் பாடலை முடித்துக் கொடுத்து, தற்போது அப்பாடலின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்பாடல் மட்டுமன்றி, படத்தின் பின்னணி இசையையும் தமன் கவனிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
"'மாஸ்' படத்துக்கு யுவன் தான் இசையமைப்பாளர்" என்று இயக்குநர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் இச்செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். ஆனால், படம் வெளியாகும் சமயத்தில் உண்மை வெளிவரத் தானே போகிறது என்கிறார்கள் உண்மை நிலவரம் அறிந்தவர்கள்.
இதே போன்ற நிலைமை தான் 'தில்லாலங்கடி' படத்துக்கும் ஏற்பட்டது. யுவன் இசையில் 4 பாடல்களும், தமன் இசையில் 1 பாடலும் அப்படத்தில் இடம்பெற்றது. அப்படத்தின் பின்னணி இசையையும் தமன் தான் கவனித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.