தமிழ் சினிமா

திரைப்படங்களில் ஆணாதிக்கம் அதிகரித்திருக்கிறது: கவிஞர் வைரமுத்து சிறப்புப் பேட்டி

மகராசன் மோகன்

கவிஞர் வைரமுத்துவிடம் சாதாரணமாகவே தமிழ் துள்ளி விளையாடும். அதிலும் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மணிரத்னம் போன்ற இயக்குநரின் படத்துக்கு அவர் பாடல் எழுதும்போது கேட்கவா வேண்டும்?

‘ஓ காதல் கண்மணி’ படத்துக்காகக் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள பாடல்கள் அனைத்தும் மனதைக் கொள்ளையடிக்கும் வகையில் அமைந்துள்ளன. அதில் ஒரு பாடல் இங்கே.

சீறும் சினாமிகா

நீ போனால் கவிதை அனாதிகா

நீ என்னை நீங்காதே

நீ என்னை நீங்காதே

இமைகளில் தாழ்வில்

உடைகளின் தளர்வில்

என்னோடு பேச மட்டும்

குயிலாகும் உன் குரலில்

வறண்ட உதட்டின்

வரிப் பள்ளங்களில்

காதல்தானடி

என் மீதுனக்கு?

“காதலன் மீது ஊடல் கொண்ட காதலி, அவனை உதறிவிட்டுப் போகும்போது காற்றைப்போல அவள் பின்னாலேயே காதலன் துரத்திச்சென்று பாடுவதுதான் இந்தப்பாடலின் சூழல்’’ என்று புரு வங்களை உயர்த்திப் பாடல் வரிகள் உருவான நிமிடங்களைப் பகிர்கிறார், கவிஞர் வைரமுத்து.

இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கவிஞர் வைரமுத்து கூட்டணியில் வெளிவரவிருக்கும் ‘ஓ காதல் கண்மணி’ படத்துக்காக பயணித்த அனுபவங்களோடு பேட்டிக்குத் தயாரானார்…

மணிரத்னம் - வைரமுத்து - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் பாடல்கள் தனித்து கவனிக்க வைக்கிறதே?

மூன்று பேரின் மன உயரம் ஒன்றாக இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். “தண்ணீர்ப் பூக்களுக்குத் தனியாக உயரமில்லை; தண்ணீரின் உயரம் எதுவோ அதுதான் தண்ணீர்ப் பூவின் உயரம். அதுபோல் மனதின் உயரம்தான் மனிதன் உயரம்” என்ற பொருளில் வள்ளுவர் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது.

அவர்களின் மன உயரத்துக்கு நான் இருப்பதாக அவர்கள் நினைப்பதும், என் மன உயரத்துக்கு அவர்கள் பொருந்துவதும்தான் காரணம் என்று நினைக்கிறேன்.

மணிரத்னம் படங்களின் வசனங்களில் உங் களுடைய பங்களிப்பு இருந்திருக்கிறதா?

குறைவுதான். மணிரத்னம் பாடல்களில் தனித்தமிழ், நறுந்தமிழ் வேண்டுமென்று விரும்புகிறவர். ‘இருவர்’ படத்துக்காக மட்டும் கொஞ்சம் கவிதை வேண்டும் என்று கேட்டார். மொழியும் மொழி சார்ந்தும், அரசியலும் அரசியல் சார்ந்தும் இருந்த படம் என்பதால் அதில் என் பங்களிப்பு சிறிய அளவில் இருந்தது.

இன்றைய சூழலில் சமூக வலைத்தளங்கள் சூழ்ந்த வடிவமாகக் காதல் மாறியிருக்கிறதே. தற்போதைய நிலைக்கு ஏற்றார்போல பாடல் வரிகளையும் மாற்றிக்கொண்டுதானே ஆக வேண்டும்?

வாழ்வு மாறுகிற போது மொழியின் தேவையும், உருவமும், வெளிப்பாடும் மாறுகிறது என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். மாதவி, தன் காதலன் கோவலனுக்கு தாழம்பூ மடலில் கவிதை எழுதினாள். அதுவே கால ஓட்டத்தில் பனை ஓலை யாக மாறியது.

பிறகு காகிதத்தில் எழுதப்பட்டது. கடிதமே எழுத முடியாதவர்கள் தூது அனுப் பினார்கள். தற்போது காதலுக்குக் கடிதம் என்பதே ஒழிந்துவிட்டது. கையெழுத்தையே காசோ லைக்கு மட்டும் என்று பயன்படுத்தும் நிலையில் இருக்கிறோம். இந்தக் காலத்து காதலர்களுக்கு வாக்கியம் என்ற புடவை தேவையில்லை. வார்த்தைகள் என்ற சிற்றாடையே போதும்.

சங்க இலக்கியத்தில் தலைவன், தலைவி ‘உடன் போக்கு’ நிகழ்வுகளை எல்லாம் படித்திருக்கிறோம். இதை எல்லாம் இந்தக் காலத்து காதலோடு ஒப்பிட முடியுமா?

சங்க இலக்கியத்தில் வாழ்க்கைதான் இலக்கிய மாக இருந்தது. உடன்போக்கு தமிழர்களின் மரபுதான். அப்போது சாதி என்கிற கட்டுமானம் இவ்வளவு இறுக்கமாக இல்லை. சங்க இலக்கியத் தில் கவுரவக் கொலைகள் இருந்ததாகச் சொல்லப் படவில்லை.

ஒரு பெண் குரங்கின் மரணத்தைப் பார்த்து ஒரு ஆண் குரங்கு குன்றின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்ட பாடல் தான் சங்க இலக்கியத்தில் இருக்கிறது. காத லுக்காக மனிதர்கள் கொலைசெய்யப்பட்டதோ, தற்கொலை செய்துகொண்டதோ இல்லை. முன் னோர்களும் இலக்கியங்களும் இயக்கங்களும் உடைக்கப் பார்த்த சாதி என்கிற கட்டுமானத்தை இன்று தொழில்நுட்பம் உடைத்துக்கொண்டி ருக்கிறது. அடுத்த நூற்றாண்டில் திருமணம் என்ற நிறுவனம் இருக்குமா என்று தெரியவில்லை.

தற்கால சினிமாவில் இலக்கியத்துக்கும், கவிதை களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?

எப்போதுமே இலக்கியத்துக்கான பக்கம் கொஞ்சமும், ஜனரஞ்சகத்துக்கான பக்கம் அதிக மாகவும் சினிமாவில் இருக்கிறது. ஆரம்ப காலத் தில் வரலாற்றுப் படங்களும், இலக்கியக் கதை களும் கவிதைகளை வேண்டின. இன்றைய சூழ லில் அது இல்லை. பெண் பாத்திரங்களுக்கு முக் கியத்துவம் உள்ள கதையில்தான் இலக்கியம் இயங்க முடியும். இன்று பெண் பாத்திரத்துக்கான இடம் திரைக்கதையில் இல்லை. ஏன்? சுவரொட்டி களில் கூட கதாநாயகர்கள் மட்டுமே சிரிக்கிறார் கள். பெண்முகங்கள் இல்லை.

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆருடன், ஜெயலலிதா வும், ‘நவராத்திரி’ படத்தில் சிவாஜியுடன், சாவித் திரியும், ‘பாட்ஷா’ படத்தில் ரஜினியுடன் நக்மாவும், ‘வாழ்வே மாயம்’ படத்தில் கமலுடன், ஸ்ரீதேவியும் சுவரொட்டிகளில் நின்றார்கள். இன்றைக்கு வருகிற திரைப்படங்களின் சுவரொட்டிகளில் கூட ஆண்களின் ஆதிக்கம்தான் அதிகரித்திருக்கிறது. பெண் கதாபாத்திரங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்ட கதைகளில் இலக்கியத்துக்கு வேலை இருக்காது.

சமீப காலமாக புத்தக காட்சிகளில் அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் விற்றுத் தீர்கிறது. உண்மையாகவே வாசிப்பாளர்கள் அதிகரித்து வருவதாக உணர்கிறீர்களா?

வாசிப்புப் பழக்கம் அற்றுப்போகவில்லை. வாசிப்பவன் தீவிர வாசகனாக மாறியிருக்கிறான். தேர்வு செய்து படிக்கிறான். எனது படைப்புகளில் வைகறை மேகங்கள் 33 பதிப்பு கண்டிருக்கிறது. கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் பல பதிப்புகள் கண்டிருக்கின்றன. ஆனால் என் படைப்புகளில் சில படைப்புகள் தேங்கி நிற்கின்றன. ஏன்? வாசகன் தேர்வு செய்து படிக்கிறான். அவன் புத்திசாலி.

SCROLL FOR NEXT