'பாண்டிய நாடு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் சுசீந்திரன் - நடிகர் விஷால் இணையின் புதிய படம் சென்னை சேத்துப்படில் இன்று துவங்கியது.
விஷாலின் 19-வது படமான இதை வேந்தர் மூவிஸ் தயாரிக்கிறது. 'பாண்டிய நாடு' திரைப்படத்தின் அணி மீண்டும் இப்படத்தில் இணைகிறது. ஒளிப்பதிவாளராக, ’வேலையில்லா பட்டதாரி’ மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த வேல்ராஜ் பணியாற்றவுள்ளார். படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் படம் குறித்து நடிகர் விஷால் பேசுகையில், "இது விசேஷமான படமாக எல்லாருக்கு அமையும். 'பாண்டிய நாடு' அணியோடு எனது இரண்டாவது படம் இது. எங்களது முந்தைய வெற்றியை முந்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. எங்கள் அணியில் வேல்ராஜ் புதிதாக இணைந்துள்ளார்" என்றார்.
தயாரிப்பாளார் வேந்தர் மூவிஸ் மதன் பேசும்போது, "சுசீந்திரன் - விஷால் இணை, 'பாண்டிய நாடு' படத்தின் மூலம் வெற்றி பெற்று நிரூபித்துள்ளனர். இந்தப் படம் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது" என்றார்.
டி.இமான் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கனவே சில பாடல்களின் ஒலிப்பதிவு முடிந்துவிட்டது. அதன் படப்பிடிப்பு விரைவில் நடக்கும்