தமிழ் சினிமா

2015 என்னுடைய ஆண்டு: ‘ஜெயம்’ ரவி சிறப்புப் பேட்டி

கா.இசக்கி முத்து

‘ரோமியோ ஜுலியட்’, ‘பூலோகம்’, ‘அப்பாடக்கர்’, ‘தனியொருவன்’ என்று ஏகப்பட்ட படங்களை கையில் வைத்திருக்கிறார் ‘ஜெயம்’ ரவி. நிற்கக்கூட நேரமில்லாமல் படப்பிடிப்புத் தளங்களுக்கு பறந்துகொண்டிருக்கும் அவரைச் சந்தித்தோம்.

‘ரோமியோ ஜுலியட்’ என்ற தலைப்பு ஷேக்ஸ்பியரின் நாடகத் தலைப்பு போல உள்ளதே?

‘ரோமியோ அண்ட் ஜுலியட்’ என்பதுதான் ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகத்தின் தலைப்பு. அந்த நாடகத்தின் முடிவு மிகவும் சோகமாக இருக்கும். ஆனால் இப்படத்தில் சந்தோஷமான முடிவை வைத்திருக்கிறோம்.

தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களாக காதல் கலந்த காமெடிப் படங்கள் வரவில்லை. அந்தக் குறையை இந்தப் படம் கண்டிப்பாக தீர்க்கும்.

இப்படத்தில் நான் உடற்பயிற்சி கற்றுக் கொடுப்பவராக வருகிறேன். இதில் ஆர்யா கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். அவருடைய உடற்பயிற்சியாளராக நான் நடிக் கிறேன். ஹன்சிகா விமானப் பணிப்பெண்ணாக நடித்திருக்கிறார்.

இதுவரை நான் நடித்த படங்களில் எல்லாம் நல்ல பையனாகவே நடித்துவிட்டேன். பெண்களைக் கிண்டல் பண்ணாமல் நல்ல பெயர் எடுத்துக் கொண்டிருந்தேன். இந்தப் படத்தில் அதைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறேன். இப்படத்தில் ஒரு நாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறது.

‘எங்கேயும் காதல்’ படத்துக்கு பிறகு ஹன்சிகாவுடன் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறீர்கள். திரையுலகில் அவரது வளர்ச்சி எப்படியிருக்கிறது?

‘எங்கேயும் காதல்’ படத்தில் ஹன்சிகா பள்ளிக்குச் செல்லும் பெண்ணைப் போன்று இருந்தார். இப்போது, கல்லூரிப் பெண்ணாக மாறிவிட்டார். சினிமாவைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார். 4 வருடங்களில் அவருடைய வளர்ச்சி என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.

2014-ல் ‘நிமிர்ந்து நில்’ படத்தைத் தவிர உங்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லையே. என்ன காரணம்?

கல்யாண் இயக்கத்தில் ‘பூலோகம்’ படத்தின் பணிகள் எப்போதோ முடிந்துவிட்டன. ‘ஐ’ படத்தின் வெளியீட்டுப் பணிகளில் ஆஸ்கர் நிறுவனம் கவனம் செலுத்தி வந்ததால், ‘பூலோகம்’ படத்தின் வெளியீட்டில் தாமதமாகி விட்டது. இப்போது ‘ஐ’ வெளியாகிவிட்டதால், விரைவில் ‘பூலோகம்’ வெளியாகும் என்று ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

‘ரோமியோ ஜுலியட்’, ‘பூலோகம்’, ‘அப்பாடக்கர்’, ‘தனியொருவன்’ இப்படி 2015-ல் என் படங்கள் நிறைய வெளியாகும். இந்த ஆண்டு ஜெயம் ரவி ஆண்டாக இருக்கும். அதில் சந்தேகமில்லை.

இப்போது எந்த மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?

இந்த மாதிரியான படங்கள் மட்டும் தான் பண்ண வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. எனக்கு வருகிற கதை எல்லாமே வெற்றிக் கதையாக இருக்க வேண்டும் என்று மட்டுமே நினைப்பேன். அக்கதை எந்த மாதிரியான களம் என்றெல்லாம் நான் கவலைப்பட்டதில்லை. என்னால் முடியும் என்று நம்பி வந்த இயக்குநர்களின் கதையை மட்டுமே இதுவரை பண்ணியிருக்கிறேன்.

எனக்கு எல்லா இயக்குநர்களுடனும் படம் பண்ண ஆசை. இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். இவ்வளவு படங்கள் நடித்த பிறகும் எந்தக் கதை வெற்றியடையும், எது தோல்வியடையும் என்று யூகிக்க முடியவில்லை. தோல்வி வரும் போது தான் நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது.

உங்கள் நண்பர்கள் ஆர்யா, விஷால் இருவருக் கும் எப்போது கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறீர்கள்?

ஆர்யா, விஷால் இருவருக்கும் கல்யாணம் என்பது மிகப்பெரிய விஷயம். காதலித்தோ, அல்லது வீட்டில் பார்க்கும் பெண்ணையோ... கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணட்டும். அவர்கள் திருமணம் செய்துகொள்ளாததால் எங்களது பெயரும் சேர்ந்து இல்லையா கெட்டுப் போகிறது!

SCROLL FOR NEXT