'நண்பேன்டா' படத்துக்கு வரி விலக்கு மறுக்கப்பட்டு இருப்பதால், வழக்கு தொடர உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'நண்பேன்டா' படத்தை இயக்கி இருக்கிறார் ஜெகதீஷ். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தை தயாரித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடித்து ஏப்ரல் 2ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்திற்கு 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். 'யு' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து வரி விலக்கு அதிகாரிகளுக்கு படத்தை திரையிட்டு காட்டினார்கள். படத்துக்கு வரி விலக்கு அளிக்க முடியாது என்று அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள்.
படத்தில் ஆபாச காட்சிகளோ, ஆபாச வசனங்களோ இல்லாத பட்சத்தில் எதற்காக வரி விலக்கு மறுக்கிறார்கள் என வரி விலக்கு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார். இதே பிரச்சினை, உதயநிதியின் முந்தைய படமான 'இது கதிர்வேலன் காதல்' படத்துக்கும் நேர்ந்தது. அதற்கும் உதயநிதி வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 2ம் தேதி தமிழகம் முழுவதும் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் 'நண்பேன்டா' படத்தை வெளியிட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.