தனது முடிவுகளுக்கு அப்பா (இளையராஜா) ஒருபோதும் தடை விதித்தது என்று கூறிய யுவன் சங்கர் ராஜா, 1,000 படங்களுக்கு இசையமைத்த தன் தந்தைக்கு தமிழ்த் திரையுலகம் உரிய மரியாதை செலுத்தவில்லை என்று கவலை தெரிவித்தார்.
திருநெல்வேலியில் மே 9-ம் தேதி நடைபெறவுள்ள 'யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்' இசை நிகழ்ச்சி தொடர்பாக, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
திருமணத்துக்கு பிறகு கலந்துகொண்ட முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் யுவன் சங்கர் ராஜா கூறியது:
"யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்' முதலில் ஒரு தேதியில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், பிரம்மாண்டமாக பண்ண வேண்டும் என்று தீர்மானித்து தேதியை மாற்றி அமைத்திருக்கிறோம். வேறு காரணங்கள் எதுவும் இல்லை.
இந்நிகழ்ச்சியில் எனது படங்களில் இருந்து பாடல்கள் இடம்பெறும். அப்பா இளையராஜா, இயக்குநர் வெங்கட்பிரபு, பிரேம்ஜி என அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மற்றும் வேறு யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை முறைப்படி அறிவிக்கிறோம்.
'மாஸ்' படத்தைப் பொறுத்தவரையில் தமன் இசையமைக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. உண்மையில் நடந்தது என்னவென்றால், இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் தமன் 'நான் யுவனின் இசையில் பணிபுரிய ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள்' என்று கேட்டிருக்கிறார். வெங்கட்பிரபு என்னிடம் கேட்ட போது, ஏதாவது நல்ல சந்தர்ப்பம் வரும் போது பண்ணலாம் என்று கூறினேன். 'மாஸ்' படத்தில் நயன்தாரா தேதிகள் உடனே கொடுத்துவிட்டதால், பாடல் உடனே வேண்டும் என்று கேட்டார்கள். ஆகையால், அப்பாடலுக்கு மெட்டு அமைத்தது நான், அந்த மெட்டுக்கு இசை வடிவம் தமன் கொடுத்தார்.
திருமணம் குறித்து கேட்கிறீர்கள். என்னுடைய திருமண வாழ்க்கை நல்லபடியாக போய் கொண்டிருக்கிறது. என்னுடைய திருமணம் எனது அப்பா சம்மதத்துடன்தான் நடைபெற்றது. திருமணத்தில் அப்பா கலந்துகொள்வதாக தான் இருந்தது. ஆனால், பெண் வீட்டு தரப்பில் இருந்து உடனடியாக திருமணம் என்று பேச்சு நிலவியது. ஆகையால், நான் அப்பாவிடம் போன் போட்டு சொன்னேன். இரண்டு நாளில் திருமணம் என்றால் என்னால் கலந்து கொள்ள முடியாது. கண்டிப்பாக சென்னை வந்தவுடன் சந்திக்கலாம் என்றார். திருமணமான மறுநாளே சென்னை வந்தவுடன் அப்பாவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கினேன். ஆனால், என்னுடைய திருமணத்தில் அப்பா கலந்து கொள்ளாத வருத்தம் எனக்கு இருக்கிறது.
மதம் மாறியது பற்றி கேட்கிறீர்கள். படத்துக்கு இசையமைக்க ஆரம்பித்த தருணத்தில் இருந்தே ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரைத் தான் வைத்திருக்கிறார். ஆனால், கீ-போர்ட் ப்ளேயராக இருக்கும் போது திலீப் குமார். இப்போது நான் மதம் மாறிவிட்டாலும், யுவன் என்ற பெயரை மாற்றினால் நன்றாக இருக்காது என்பதால் பெயரை மாற்றவில்லை. அப்பா எனது முடிவுகளுக்கு எப்போதுமே தடை போட்டதில்லை. மதமாற்றம் குறித்து எல்லாம் அப்பா எதுவுமே தெரிவிக்கவில்லை.
நான் ஆரம்பித்தில் இருந்தே தனியாக இருந்து பழகிவிட்டேன். சமீபத்தில் என்னுடைய வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன. ஆகையால், ஒரு பாதுகாப்பான கூடுக்குள் என்னை அடைத்துக் கொண்டேன். மற்றபடி, பத்திரிகையாளர்களை சந்திக்கத் தயங்குவதற்கு வேறு எதுவும் காரணமில்லை.
நான் இசையமைக்கும் போது ட்விட்டர் தளத்தில் உள்ள கருத்துக்கள் அவ்வப்போது வந்து போகும். ஆகையால், ஏன் என்று விலகியிருந்தேன். இப்போது இன்ஸ்டாக்ராமில் மட்டுமே இருக்கிறேன். விரைவில் மீண்டும் ட்விட்டர் தளத்துக்கு திரும்ப இருக்கிறேன்.
ஒரு வருடத்துக்கு 14 படங்களுக்கு எல்லாம் இசையமைத்திருக்கிறேன். இந்த வருடம் 'இடம் பொருள் ஏவல்', 'மாஸ்', 'யட்சன்', 'தரமணி', 'செல்வராகவன் படம்' ஆகிய படங்களுக்கு இசையமத்து வருகிறேன். இனிமேல் படங்களை தேர்வு செய்து பண்ணலாம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். விரைவில் இசை நிறுவனம் ஒன்று ஆரம்பித்து, அந்நிறுவனம் மூலத்தின் எனது இசையை வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன்.
என் அப்பா 1000 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதையொட்டி, அவருக்கு தமிழ்த் திரையுலகம் பிரம்மாண்ட விழா எதையும் நடத்தாததில் எனக்கு மிகுந்த வருத்தம் உள்ளது" என்றார் யுவன் சங்கர் ராஜா.