தமிழ் சினிமா

விரைவில் ரஜினி, கமலை சந்திக்கிறார் சிங்காரவேலன்

ஸ்கிரீனன்

'லிங்கா' பிரச்சினை முழுவதுமாக முடிவுற்றவுடன், விநியோகஸ்தர் சிங்காரவேலனை சந்திக்க ரஜினி, கமல் இருவரும் முடிவு செய்திருக்கிறார்கள்.

'லிங்கா' படம் நஷ்டமானதைத் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் கடும் போராட்டத்தில் இறங்கினார்கள். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன் நின்று பேசியவர் திருச்சி, தஞ்சாவூர் விநியோகஸ்தர் சிங்காரவேலன்.

அப்பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பதை யாருக்கு பயப்படாமல் வெளிப்படையாக கூறி வந்தார். தற்போது 'லிங்கா' பிரச்சினை ஒருவழியாக இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. முதலில் 10 கோடி நஷ்ட ஈடு என்பதைக் கடந்து தற்போது பன்னிரண்டரை கோடி நஷ்ட ஈடாக வழங்கப்பட்டு இருக்கிறது. இப்பணத்தை தற்போது விநியோகஸ்தர்களுக்கு இடையே பங்கு பிரிக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'லிங்கா' நஷ்ட ஈடு பேச்சுவார்த்தையில் தைரியமாக செயல்பட்டு வந்ததால் ரஜினிகாந்த் சிங்காரவேலனை சந்திக்க முடிவு செய்திருக்கிறார். இப்பிரச்சினை முழுவதுமாக முடிந்தவுடன், வீட்டுக்கு மதிய உணவு உண்ண வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

அதுமட்டுமன்றி, 'லிங்கா' பிரச்சினைக்கு இடையே 'உத்தமவில்லன்' படத்துக்கு ரெட் போட வேண்டும் என்று எழுந்த கோரிக்கையை நிராகரித்து வெளியேறினார் சிங்காரவேலன். இப்பிரச்சினை கமலுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கமல், 'உத்தம வில்லன்' வெளியான உடன் ஒரு நாள் சிங்காரவேலனைப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

ரஜினி, கமல் இருவரையும் விரைவில் சிங்காரவேலன் சந்திக்க இருப்பது தான் தமிழ்த் திரையுலகின் தற்போதைய பேச்சாக இருக்கிறது.

SCROLL FOR NEXT