தமிழ் சினிமா

மா.கா.பா.ஆனந்த், சிருஷ்டி டாங்கே நடிக்கும் நவரச திலகம்

செய்திப்பிரிவு

மா.கா.பா.ஆனந்த், சிருஷ்டி டாங்கே நடிக்கும் புதிய படத்துக்கு 'நவரச திலகம்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ராஜ்கபூர், பூபதிபாண்டியன், எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் காம்ரன். இவர் 'நவரச திலகம்' படத்தின் மூலம் இயக்குநராக புரமோஷன் ஆகிறார். இந்தப் படத்தில் மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்.

கருணாகரன், சித்தார்த் விபின், ஜெயப்பிரகாஷ், இளவரசு, பாவா லட்சுமணன், மீராகிருஷ்ணன், லஷ்மி, மகாதேவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரமேஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் காம்ரன் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ''நம்மைச் சுற்றிலும் நண்பர்கள் என்கிற பெயரில் சில நவரச திலகங்கள் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நண்பனின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் இந்தப் படத்தின் கதை.

90 சதவீதம் காமெடி கலந்து குடும்பப் பொழுதுபோக்குப் படமாக உருவாக்கி வருகிறோம். பொள்ளாச்சியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்து விட்டது.

அடுத்த கட்ட படப்பிடிப்பு திருச்சி, கும்பகோணம் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைகிறது'' என்றார் இயக்குநர் காம்ரன்.

SCROLL FOR NEXT