பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு அரபு நாடுகளைப் போல் தண்டனை வழங்க வேண்டும் என்று 'சவுகார்பேட்டை' படத்துவக்க விழாவில் லட்சுமி ராய் கருத்து தெரிவித்தார்.
ஸ்ரீகாந்த், லட்சுமி ராய் நடிக்கும் 'சவுகார்பேட்டை' படத்துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. வி.சி.வடிவுடையான் இயக்கும் இப்படத்தை ஜான் மேக்ஸ் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் துவக்க விழாவில், நடிகைகளின் பெயரால் வீடியோக்கள் வெளிவருவது மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு லட்சுமி ராய், "நடிகை பெயரால் வீடியோக்கள் வருவது அதிகரித்துவிட்டது. இதை உருவாக்க ஒரு குழு இருக்கிறது. இதை ஒரு வியாபாரம் மாதிரி செய்கிறார்கள். ஒரு நடிகை சாயலில் பல பெண்கள் இருப்பார்கள். இந்த மாதிரி போலியான வீடியோவை உருவாக்குபவர்களை தண்டிக்க வேண்டும். அதையெல்லாம் தாண்டி எங்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது.
சினிமாவிலும், அரசியலிலும் காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்படி பெயரைக் கெடுக்க செய்கிறார்கள். என் வாழ்க்கையிலும் அது நடந்துள்ளது. ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுத்தால், இன்னொரு கும்பல் தோன்றும். இந்த மாதிரி வீடியோக்களால் பெரிய பாதிப்பு இல்லை. இரண்டு நாட்கள் பேசுவார்கள்.
ஆனால், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை விடக்கூடாது. அப்படிப்பட்டவர்கள் மனிதர்களே இல்லை. அந்த மாதிரி சைக்கோக்களை சிறையில் போட்டு அரசு செலவு செய்யாமல் மரண தண்டனை கொடுக்க வேண்டும். அரபு நாடுகளில் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை உண்டு. அதே போல் இங்கும் தண்டிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.