பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் 'ரஜினி முருகன்' ஜூன் 15ம் தேதி வெளியாக இருக்கிறது.
சிவகார்த்திகேயன், சூரி, ஸ்ரீதிவ்யா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. பொன்ராம் இயக்கத்தில் வெளியான இப்படத்துக்கு இமான் இசையமைத்து இருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூலையும் அள்ளியது.
தற்போது இதே கூட்டணி மீண்டும் 'ரஜினி முருகன்' படத்தில் இணைந்திருக்கிறது. நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. சமுத்திரக்கனி வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'காக்கி சட்டை' திரைப்படம் தற்போது வசூலைக் குவித்திருக்கிறது. இதனால் விநியோகஸ்தர்கள் தற்போது 'ரஜினி முருகன்' படத்தை பெரிதும் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
'ரஜினி முருகன்' படத்தின் தமிழ்நாட்டு உரிமையை வாங்கியிருக்கும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஜூன் 15ம் தேதி இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது.