தமிழ் சினிமா

கோச்சடையான் பட விவகாரம்: ரஜினிகாந்த் தலையிட கோரிக்கை

செய்திப்பிரிவு

‘கோச்சடையான்’ படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக கொடுக்கப் பட்ட தொகையை ரஜினிகாந்த் தலையிட்டு பெற்றுத்தர வேண்டும் என்று ஆட் பீரோ தனியார் நிறுவனம் வேண்டுகோள் விடுத் துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத் தைச் சேர்ந்த அபிர்சந்த் நாகர், மதுபாலா இருவரும் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

‘கோச்சடையான்’ திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் ரிலீ ஸானது. இப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக மீடியா ஒன் நிறுவனம் எங்களிடம் ரூ.10 கோடியை கடனாக பெற்றது. மீடியா ஒன் நிறுவனத்துக்காக கடன் ஒப்பந்தத்தில் லதா ரஜினிகாந்த் கையெழுத்திட்டார். படம் வெளியானதும் பணத்தை திரும்ப கொடுத்துவிடு வதாக உறுதியளிக்கவும் செய்தார். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.

நாங்கள் கொடுத்த ரூ.10 கோடிக்கு 12 சதவீதம் கமிஷன் மற்றும் வட்டியுடன் மொத்தம் ரூ.15.84 கோடி திருப்பித் தரவேண்டும். ஆனால் இதுவரை ரூ.9 கோடியை மட்டுமே திரும்பக் கொடுத்துள்ளனர். மீதமுள்ள ரூ.6.84 கோடியை தராமல் இழுத்தடித்து வருகிறார்கள். இந்த பிரச்சினை குறித்து லதா ரஜினிகாந்த் சரியான பதில் கூற மறுக்கிறார். இதற்காக நாங்கள்தான் அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும். மாறாக அவர்கள் எங்கள் மீது வழக்கு போட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த பிரச்சினையை ரஜினிகாந்த் கவனத்துக்கு கொண்டு போக நினைத்தோம். ‘இந்த சின்ன பிரச்சினைக்கெல்லாம் அவரிடம் பேச வேண்டாம்’ என்று லதா ரஜினிகாந்த் கூறினார். இந்த பிரச்சினையில் ரஜினிகாந்த் தலையிட்டு பணத்தை பெற்றுத் தரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT